பக்கம்:உத்தரகாண்டம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    273

கற்பனைகளையும் சமைத்துக் கொள்வதுதான் அதிசயம் என்று தானே சொன்னார்?

அப்படி இவள் கண்ணமங்கலக்கனவில் நின்றாள். ஆறு, கோயில், நல்லநீர், மனித சிநேகம், மாசுபடாத சூழல்... ஏதோ ஒரு வாயிலில் இவள் வண்டி வருகிறது. வண்டியிலிருந்து இறங்கி அந்தப் பெண்ணும் ரங்கனும் வீட்டுப்படி ஏற்றிக் கூட்டிச் செல்கின்றனர். இவளால் நிமிர்ந்து பார்க்கக் கூட முடியவில்லை.

அங்கே ஒரு கூடத்தில், நாற்காலியில் உட்கார வைக்கிறார்கள்.

வீட்டில் யாரும் இருப்பதாகக் குரல் கேட்கவில்லை. ஒரு சாப்பாட்டு மேசை; அதைச் சுற்றிய நாற்காலிகளில் ஒன்றில்தான் அவளை உட்காரவைத்திருக்கிறார்கள். தலை தரிக்கவில்லை. மேசை மீது கவிழ்ந்து கொள்கிறாள்.

அப்போது தான் பார்க்கிறாள். அவள் சேலை...யில்லை, உடுத்தியிருப்பது. நீளமாக கவுன்... நைட்டி, ‘அது’ போட்டிருக்கிறாள். ‘முருகா ?’ இதென்ன கோலம்? இதையா இவளுக்கு மாட்டிவிட்டார்கள்?

“ஏம்மா? நீ ரங்கன் பொஞ்சாதி மருதுதானே? என் சீலய ஏண்டி எடுத்திட்டு இத்தை மாட்டினீங்க? இதென்னடி கோலம், இந்த வயசில எனக்கு?”

“கோச்சுக்காத தாயி, நீ சீலைய நனச்சிட்டுத் தொப்பயாக் கெடந்த, ஒடனே அது போன் போட்டுச் சொல்லிட்டு எனக்கு ஆளனுப்பிச்சிது. ஒடம்பு நாத்தமெடுக்காது?... இது புதுசுதா... என் தங்கச்சி வச்சிருந்தா. ஆபத்துக்கு ஒண்ணில்லேன்னு தூக்கி மாட்டின...” சிறிது நேரத்தில் ரங்கன் இன்னொரு பணியாளனுடன் வருகிறான்.

“நீங்க போன் போட்டப்பவே அம்மா ரூம் சுத்தமாக்கச் சொல்லிட்டாங்க...”

உ.க.-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/275&oldid=1050353" இலிருந்து மீள்விக்கப்பட்டது