பக்கம்:உத்தரகாண்டம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274   ✲   உத்தரகாண்டம்


அவளை இருவருமாக நடத்திக் கூட்டிச் செல்கின்றனர்.

கீழே பளிங்காகத் தரை. ஒரு வாயிலில் நுழைந்து ஒழுங்கை போன்ற பகுதி கடந்து ஓர் அறைக்கு வருகிறார்கள்.

அந்த அறையில் ஒரு கட்டிலில், மெத்தை-விரிப்பு-தலையணை அதில் உட்கார்த்துகிறார்கள்.

“படுத்துக்கம்மா? உம்மவன் வூடுதா. அவுரு டில்லிக்குப் போயிருக்கிறாரு. சந்தோசமா இரு...!”

அவள் பதிலை எதிர்பாராமலே ரங்கனும் அவன் சம்சாரமும் போகிறார்கள். அவளுக்குத் துயரம் கரையும் கண்ணீர்கூட வரவில்லை.

‘என் ஆயுசில நான் கட்டில் மெத்தைன்னு சாயவில்லை. இப்ப, இதெல்லாமும் தண்டனையா, முருகா?’

நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? கருப்பு, அசத்தியம், பொய்யின்னு துணை போக மாட்டேன்னு சொன்னது தப்பா? முருகா, என்னைக் கீழே தள்ளினியே, அப்பிடியே சாகவுட்டிருக்கக் கூடாதா?...

“ஆ... படுத்துக்குங்க பெரியம்மா! அப்புறம் நாங்கல்லாம் எப்படிப் பிழைக்கிறது?”

‘வெள்ளையில் சிறு பூப்போட்ட சல்வார் கமிஸ் அணிந்த ஓர் அழகான பெண் கழுத்தில் ரப்பர் மாலையுடன் அவளைப் படுக்க வைக்கிறாள்.

பன்னிர்ப்பூப்போல முகம். சிரிப்பு. பளீர்ச்சாயம் இல்லை. ஒரு மென்மையான மணம்; அவள் தொட்டபோது உணர்வே இதமாக இருக்கிறது.

காதுகளில் அதை மாட்டிக் கொண்டு, அவளும் நாற்காலியில் அமர்ந்து அவள் நெஞ்சை, முதுகைப் பரிசோதிக்கிறாள். கண்களை நீக்கிப் பார்க்கிறாள். இரத்த அழுத்தம் பார்க்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/276&oldid=1050354" இலிருந்து மீள்விக்கப்பட்டது