பக்கம்:உத்தரகாண்டம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    275


“பெரிம்மா, நீங்க சரியாவே சாப்பிட மாட்டீங்களோ? ஒடம்புல ரத்தமே இல்ல...?”

“ஏன் சாப்புடாம?... நேத்துக்கூட அநு புள்ளங்களோட, இங்க புள்ள கேக் வாங்கியாந்து குடுத்தா...”

அவளுக்கு அதெல்லாம் புரிந்திருக்காது.

மென்மையாகச் சிரிக்கிறாள்.

“உங்க உடம்புக்கு ஒண்ணில்ல. நல்லா சாப்புடனும்; ரெஸ்ட் எடுக்கணும், தூங்கணும். ஒரு நாலஞ்சு நாள்ள சரியாயிடும். பிறகு உங்க அநு, புள்ளங்க, சிங்கா, அதென்ன சிங்கு ?... அங்கே போயி ஜாலியா இருக்கலாம். இப்ப உங்களுக்கு ஒரு பொண்ணு சாப்பாடு கொண்டு வரும். சாப்பிடுங்க. எந்திரிச்சி நடக்கக் கூடாது. மாத்திரை கொண்டாந்து குடுப்பேன். போட்டுட்டு நல்லா தூங்குவீங்க. எதுவானும் வோணுன்ன, இத, மணி கொண்டாந்து தலப்பக்கம் ஸ்டூல்ல வைக்கிறேன். அடியுங்க. கன்னிம்மா ஒரு பொண்ணு வருவா இப்ப, அவ உங்களுக்கு எது வோணுன்னாலும் செய்வா. வரட்டுமா?...”

மென்மையாகச் சிரித்து விட்டுக் கதவை மூடிக் கொண்டு போகிறாள்.

யார் இந்தப் பெண் ? சந்திரியின் மகள்... பேரென்னவோ சொன்னாள். அர்ச்சனாவோ, என்னவோ, அவளில்லை இது... ஒரு கால் இது மரகதத்தின் மகளா? ரஞ்சிதத்தின் மருமகளா?... அந்தக் கொடியில் இப்பிடி ஒரு மலரா?... ஆனால் நஞ்சை உள்ளே வைத்திருக்கும் பூக்கூட அழகாக இருக்கிறது. இல்லை. எல்லாப் பூக்களும் தியாகம் செய்யத்தானே மண்ணில் உதிக்கின்றன?

சற்றைக்கெல்லாம் தட்டில் சாப்பாட்டுடன் கன்னியம்மா என்ற பெண்ணைக் கூட்டிக் கொண்டு, டாக்டர் பெண் வருகிறாள். நீர்ப்பாத்திரத்தை ஓரமாக இருந்த மேசை மீது வைக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/277&oldid=1050357" இலிருந்து மீள்விக்கப்பட்டது