பக்கம்:உத்தரகாண்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26   ✲   உத்தரகாண்டம்

காரன் வேலை இல்லாம, கவுரவமா அவருகிட்ட ஒரு வேலை போட்டுத்தரச் சொல்லணும். சுதந்தரச் சர்க்காரில் ஒரு டவாலி சேவுகன். சிவப்புப்பட்டைவில்லை போட்டுட்டு தலைப்பா கட்டிட்டு நான் நிப்பேன். இத்தினி வருசமா, இந்தக் குடும்பத்துக்கு நானும் உழச்சிருக்கிறேன்...” என்று ஒருநாள் அவன் சொன்னபோது அவளுக்குத் துக்கிவாரிப் போட்டது.

அந்த வீட்டிற்குப் பெரிய பெரிய தேசத்தலைவர்கள் அவளுக்குத் தெரிந்து வந்திருக்கிறார்கள். நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போது, சிறைவாசம் அநுபவித்தவர்கள்; பெண்டு பிள்ளைகளை மறந்தவர்கள் உனது எனது, சாதி, மதம் என்ற பாகுபாடில்லாமல் அந்த வீட்டை அறச்சாலையாகக் கருதியவர்கள், எல்லோருமே வந்தார்கள். தேசப் பிரிவினை, மகாத்மாவின் மரணம் இதெல்லாமே சுதந்தர சந்தோஷத்தில் பீடித்த கருநிழல்களாகிவிட்டன. தாயம்மாளுக்கு அப்போதெல்லாம் இதைப்பற்றிய விவரங்களோ, உணர்வுகளோ இல்லை. அவர் தேர்தலுக்கு நிற்கவுமில்லை. எந்தப் பதவியையும் ஏற்கவுமில்லை. பதவி ஏற்கவில்லையே தவிர, ஏழை எளியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும், அவர்களுக்காகப் பள்ளிகள் நிறுவ வேண்டும் என்பதற்கெல்லாம் முன் நின்றார் என்பது தெரியும். குரு குலம் பள்ளியில் அவன் படிக்க முரண்டு செய்து ஆறாவதில் தவறியபோது, அய்யாவேதான் அவனுக்குச் சீட்டு சிபாரிசும் கொடுத்து, மாம்பலம் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். அப்போதே சம்பளம் இல்லாத இலவசக் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டது.

அவள் ராசமணியைப் பார்த்துவிட்டு வந்த சேதி அவருக்குத் தெரிந்திருக்கிறது “ஏம்மா? பையன் நல்லாப் படிக்கிறானா?”

அவள் தலையைக் குனிந்து கொள்ள வேண்டி இருந்தது. குறுகிப் போனாள். சுதந்தரம் வந்து முதல் தேர்தல் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/28&oldid=1049408" இலிருந்து மீள்விக்கப்பட்டது