பக்கம்:உத்தரகாண்டம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278   ✲   உத்தரகாண்டம்

உங்களுக்கு நா ஒண்ணுமே செய்யலியே?...” என்று விம்முகிறாள்.

மாத்திரை சாப்பிட்ட சற்று நேரத்தில் அவள் மயங்கி, உறங்கிப் போகிறாள். கனவுகள், பிரிசல்கள் எதுவும் இல்லாத ஆழ்ந்த உறக்கம். நேரம் என்ற உணர்வையே மிதித் தெறிந்துவிட்ட உறக்கம்.

கண்ணை மெல்லத் திறக்க உணர்வு வரும்போது, அறைக்குள் வெளிச்சம் பரவி இருக்கிறது.

உனக்கு எது தேவைப்பட்டாலும் ‘மணி அடி, கன்னியம்மா வருவாள்’ என்று டாக்டர் பெண் சொன்னது நினைவுக்கு வரவில்லை. மெள்ள எழுந்திருக்கிறாள். வயிற்றில் உள்ள பலங்களைத் தோண்டிப் போட்டுவிட்டாற் போல் பலவீனம் ஆட் கொள்கிறது. நரம்புகளே அறுந்தாற் போன்று துடித்த நிலை இல்லை என்றாலும், நிற்கத் திராணி இல்லை. மெல்ல கட்டிலில் நகர்ந்து சுவரைப் பற்றி நடந்து குளியலறைக்கு வருகிறாள். விழுந்து விடுவோமோ, பளிங்குத் தரை பாழாகிவிடுமோ? கேலி பேசுவார்களோ என்றெல்லாம் அச்சம் வதைக்கிறது. தரையின் அப்பழுக்கற்ற தன்மை பாழாகிறது. போர்க்களத்தில், கோழைக்கும் வீரம் வருமாம். அவள் எப்படியோ சமாளித்து, வாளியில் நீர்பிடித்து ஊற்றுகிறாள். கழுவ முடியவில்லை. மெள்ள எழுந்து வாய் கழுவிக் கொள்கிறாள். கண்கள் பாதாளத்தில் போய், முகம் தேய்ந்து சோர்ந்து, வீம்பும் துணிவும் அடிபட்ட சருகாய்க் காட்சி அளிக்கிறாள்.

மெள்ள சுவரைப் பற்றிக் கொண்டு படுக்கைக்கு மீள்கிறாள். ஸ்டூலில் உள்ள மணி, கவனத்தைக் கவருகிறது.

அதை அடிக்கிறாள்.

கன்னியம்மா வருவாள்; வந்ததும், ‘இந்தச் சனியன் நைட்டி வேண்டாம், எனக்கு சீலை கொண்டு வந்து தாம்மா, வெள்ளைச்சீலை... என்று கேட்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/280&oldid=1050360" இலிருந்து மீள்விக்கப்பட்டது