பக்கம்:உத்தரகாண்டம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284   ✲   உத்தரகாண்டம்

காரரு. பத்தாததுக்கு, எக்கச்சக்கமான பக்தர்கள் வலையிலே சிக்கிட்டு பண்ணாட்டு வாணிப பேரங்களில் தவிச்சிட்டிருக்காரு. அதான் குளறுபடி பண்ணிட்டாரு...”

“நீ யாரம்மா சொல்லுற?”

“உங்க கடவுள் முருகனத்தான்...”

அவள் சட்டென்று நிலைப்படுகிறாள். இந்த இளந்தலை முறை பற்றி அவளுக்குத் தெரியாது. அவன் மகள் தானோ?

“ஏங்க, நா கேக்குற. நீங்க கும்புடற சாமி, முருகனோ, ராமனோ, ஈசுவரனோ, யாராக வானாலும் இருக்கட்டும். மூலைக்கு மூலை கோயில், கும்பாபிஷேகம், தீமிதி, காவடி, பாயசம்னு கும்பிடுறாங்களே, எங்கியானும் ஏழைக்கு நியாயம் நடக்குதா? நா கவுர்மென்ட் ஆசுபத்திரிலதா இருக்கிறேன். சீட்டுப் போடுறதிலேந்து, ஆபிரேசன் டேபுள் வரையிலும் பணம் உருவுறாங்க. மயக்கம் குடுக்குமுன்ன, பணம் கேக்குறான். இல்லேன்னா, எறக்கிவுட்டுடறான். எங்கியானும் அற்புதம் நடக்குதா?... கட்சி... கட்சிக்காக ஏழை, கட்சிமாற, புதுக்காட்சி துவக்க, எல்லாத்துக்கும் அவுங்க வேண்டி இருக்கு. பதவி புடிக்க, அவங்களையே சுறண்டிக் கொள்ளையடிக்க... சினிமா, டி.வி. அது இதுன்னு எத்தினியோ வலை. அதுக்குள்ள உங்க சாமியே வுழுந்திட்டாரு...”

“கண்ணு, நீ சொல்லுறது அத்தினியும் மெய்தா...”

அவள் உருகிப் போய், ஒரு பஞ்சையின் பிள்ளையைக் காப்பாற்ற அந்த வீட்டுக்கு வந்து அவமானப்பட்டதைச் சொல்கிறாள்.

“பாட்டி, கொஞ்சம் பொறுத்துக்குங்க. உங்கள நல்லா ஆக்கி, வெளில கொண்டுவுட்டுடறேன். நீங்க, இளையவங்கள ஒண்ணு சேத்துப் போராடத் தயாராகணும்... உங்களுக்குத் தெரியுமா? இது ‘கெஸ்ட்ரூம்’னு பேரு. எத்தினி பொண்ணுகளக் கதறக்கதறக் குலைச்சிருக்காங்க தெரியுமா? சினிமா, டி.வின்னு மயங்கி, அழகழகான பொண்ணுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/286&oldid=1050366" இலிருந்து மீள்விக்கப்பட்டது