பக்கம்:உத்தரகாண்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    27

இரண்டாவது தேர்தலும் நடக்க இருந்ததென்று நினைப்பு. இவள் சமையற் கொட்டகையில் வேலை செய்து கொண்டிருக்கையில் யார் யாரோ வருவார்கள்; பேசுவார்கள். நேருவே அய்யாவைத் தேர்தலில் நிற்கச் சொல்லி இருக்கிறார்; நிற்பார் என்றார்கள்.

அந்தக் காலம் அது.

“என்னம்மா, பேசல?...” அவள் எதைச் சொல்வாள்? கதரை விட்டுக் கறுப்பணிந்தது சொல்வாளா? காசு திருடுதல், பொய் பேசுதல், புகை குடித்தல் ஆகிய மூன்று தீமைகளைப் பற்றிக் கொண்டதைச் சொல்வாளா?

“அய்யா, அவனை அனுப்பிச்சி வைக்கிறேன், கண்டிச்சி வையுங்க, உங்க பார்வையை விட்டு அனுப்பிச்சதே சரியில்லய்யா!” என்றாள் நெஞ்சு தழுதழுக்க.

அவர் சிரித்தார்.

“இதே போன்ற தப்புகளை மகாத்மா காந்திகூட அந்தக் காலத்தில் செய்திருக்கிறார். இந்த வயசு அப்படியானது. அவன் வயசில் ‘கோட்டை’த் தாண்டனும்னு ஒரு வேகம் வரும். துடிக்கும் வயசு, தாண்டட்டும். ஆனால் தாண்டுற போதும், ஓடுற போதும் ஒழுக்கம்ங்குற தறி கெட்டுப் போயிடக்கூடாது. அதுதான் தாயம்மா, முக்கியம்...” பையன் தறிகெட்ட தடத்தில் போகிறான் என்று எப்படிச் சொல்வாள்? தறிகெட்ட தடம், பொய், களவு, சூது, கள், புகை...

பதினான்கு பதினைந்து வயசு கட்டுப்படுத்த வேண்டிய வயசு. அப்பன் எடுத்துக்காட்டாக இருக்கவில்லை. அவன் குடித்துவிட்டு வந்ததும் இவள் திட்டியதையும் அவனே அறிந்திருக்கிறான். அம்மாவின் மீதும் சகோதரிகள் மீதும் மதிப்பு இல்லை...

இவள் பேசாமல் நிற்கையில் அவர் தொடர்ந்து பேசியது நினைவில் மின்னுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/29&oldid=1049411" இலிருந்து மீள்விக்கப்பட்டது