பக்கம்:உத்தரகாண்டம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    291

ஏன் பயப்படுற? நாம் பாத்துக்கறேன். நீ பாதி நான் பாதி சாப்பிடுவம்...”அவள் உருகிப் போகிறாள்.

“போதும், போதும், நான் எங்காத்தாளயே பாக்குறேன், அவ என்னில் எப்படியோ பாடுபட்டு, முதல்ல எனக்கு ஊட்டுவா. அப்பன் குடிகாரன். அவன் அடிச்சே செத்தா. இன்னொருத்திய வூட்ல கொண்டாந்தா. அவ என்ன இஸ்கூலுக்குத் தொரத்திட்டு எல்லாம் தின்னுக்குவா. ஆப்பக்கட வச்சிருந்தா. இஸ்கூல்ல போடுற சோறுதா. அப்பன் லாரி மோதி செத்துப் போச்சி. நஷ்ட ஈடுன்னு ஒரு லட்சம் குடுத்தாங்க. அத்த வாங்கிட்டு அவ ஓடிட்டா. எங்க பக்கத்து வூட்ல ஒராளு இருந்தாரு, அவுரு கிரீ ஆசுபத்திரில வார்டு பாயா இருந்தாரு. அப்ப ரஞ்சி அம்மாக்கு ஆபுரேசனாகி ரொம்ப ஒடம்பு காயலாவா இருந்தாங்க. பாவம், அவங்களுக்கு வூட்டோட இருந்து கவனிச்சிக்கத்தா வந்தே. அப்பதா நா மனிசி ஆயிருந்தே... அப்பிடிதா இங்க வந்த...”

இதைச் சொல்லிவிட்டு, அவளை மார்போடு-தலையைச் சாய்த்து அணைத்துக் கொள்கிறாள்.

“தாயி, ஆயா, எப்பிடி வேணாலும் வச்சுக்க, நீங்க போறச்சே இந்த எடத்துலேந்து என்னியக் கூட்டிட்டுப் போயிடுங்க. உங்களுக்குக் கடசி வர ஒழச்சி, என் கண்ணா காப்பாத்துவே. இது அசிங்கம் புடிச்ச எடம்...”

கதவு தட்டப்படும் ஒசை...

சட்டென்று சுதாரித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவுத் தாழைத் திறக்கிறாள்.

வந்தவள் சந்திரி... கன்னியம்மாளை உறுத்துப் பார்க்கிறாள்.

“நீயா? கதவைத் தாப்பா போட்டுக்கிட்டு என்ன ரகசியம்? நாஷ்தா குடுத்தாச்சில்ல? எல்லாம் எடுத்திட்டுப் போ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/293&oldid=1050374" இலிருந்து மீள்விக்கப்பட்டது