பக்கம்:உத்தரகாண்டம்.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்   ✲    301
 

இருக்கிற...” என்று சொன்னது நம்பிக்கைக் கனவுகளின் இடையே கரும்புகைத் திரள் போல் நினைவில் உயிர்க்கிறது.

முன்பு, அழகாயி திருவிழாவில், நான்கு மூலைகளிலும் குட்டியறுத்து இரத்தபலி இடுவார்களாம். முத்துக் கருப்பப் பூசாரியின் மீது அம்மன் ஏற, அவர் குட்டியறுத்து இரத்தம் குடிப்பாராம். அவளுக்குத் தெரிந்து அதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் அந்தப் பூசாரியைப் பார்த்திருக்கிறாள். சந்தனமும் குங்குமமும் தரித்து அவர்களை வரவேற்பார். கோயில் வளைவில் பொங்கல் வைப்பார்கள்... பாட்டு கூத்தெல்லாம் நடக்கும். அந்தப் பூசாரி மகன் சிவசாமி படித்தான். தஞ்சாவூர் தமிழ்க் கல்லூரியில் வேலை பார்ப்பதாக அய்யாவைக் காண வந்தான்.

ஏதேதோ நினைவுகள்.

“பாட்டி! பாட்டி!...”

அவள் திடுக்கிட்டவள் போல் பார்க்கிறாள். ஒரு பெண் போலீசு. கையில் எதையோ பெரிய சோடா உடைப்பான் போல் வைத்து அவளை, அந்தப் பையைத் தடவுகிறாள்.

நிலையம் கொள்ளாமல் கூட்டம். “பையில என்ன வச்சிருக்கிற?...”

அவளுக்கே தெரியாது. திறந்து காட்டுகிறாள். இருண்டு புதிய வெள்ளைச்சேலை, உள்ளாடை, ரவிக்கை, ஒரு கவரில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள்; இன்னொரு பையில், கன்னியம்மாளின் சீலை துணிகள். “எங்கே போற?”

“கண்ணமங்கலம். எம்பேத்தி டிக்கெட் எடுத்திட்டா, சாப்பிட எதானும் வாங்கியாரன்னு போனா...”

வண்டிப் பெட்டிகளில் சாக்குக் கட்டியால் புரவலர், கலைச் செம்மல், நாடு போற்றும் தமிழாளர், அடலேறு, இளவழுதி அய்யா மறைவு... என்று செய்தி எழுதுகிறார்கள்.