பக்கம்:உத்தரகாண்டம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304   ✲   உத்தரகாண்டம்

இடுப்பில் குழந்தையுடன் இடிக்கிறாள். கக்குசு வாடை, நெடியடிக்கிறது.

கன்னியம்மா எப்படியோ எத்தனையோ பேச்சுக்களை ஏற்று அவளிடம் வந்து விடுகிறாள். ஒரு பெஞ்சியில் துணி விரித்து இரண்டு குழந்தைகளை விட்டிருக்கிறாள். நெருக்கமாக இரண்டு பெஞ்சுகளிலும் மக்கள். கீழே, குண்டான் சட்டி, பெட்டி, பை என்று சாமன்கள். வழியில் ஒரு கொய்யாப்பழக்கூடை இருக்கிறது. ஒரு கைக்குட்டை வியாபாரி, முறுக்கு வாணிபம் செய்யும் பெண் பிள்ளை...

இவர்களெல்லாம் எப்போது எப்படி ஏறினார்கள்?

“ஆயா, இது பாசஞ்சர் வண்டி. பெரி... வண்டில இட்டுட்டு நேரா மாயவரத்துல எறங்கி பஸ்ஸில் போகலான்னு அசுவினி மேடம் சொன்னாங்க. மட்டி, டிக்கெட் எடுத்தே, வண்டி ஒம்பதரைன்னாங்க. அதுக்கு உக்காரன்னு இடம் போடணுமா, தெரியல. வண்டிலியே பாரும்மா, இருக்கும்னாரு, ஒருத்தர். சரின்னு பாத்தா, அந்த வண்டி அந்த பிளாட் ஃபாரத்துல போயிட்டுது. உன்னக் கூட்டிக்காம நா எப்பிடிப் போறது? அந்தக் காசு பூரப் போச்சி. திரிம்ப வந்து வெளில ரெண்டு டிக்கெட் எடுத்தே. உன்னிய போலீசுக்கார அம்மா கூட்டிட்டுப் போறதப் பாத்து, விழுப்புரம் ரெண்டுன்னு டிக்கெட் எடுத்திட்டு ஓடியாரேன்... அசுவினி அம்மா, ஆயிரம் ரூவா குடுத்தாங்க. அஞ்சு நூறு எடுத்து வேஸ்டாக்கிட்ட. பையி பத்திரம்.”

கபடமில்லாமல் இவளும் நடந்ததைச் சொல்கிறாள்.

“தாயி, இந்நேரம் அடிபட்டுச் சாவ இருந்தியே?...”

“போவட்டும். எப்படியோ, வண்டில ஏறிட்டம்?”

வண்டி ஊருகிறது; நிற்கிறது; கூட்டம் ஏறுகிறது பிதுங்குகிறது. இவளை பெஞ்சியில் இருக்கும் பிள்ளைகளை நகர்த்தி, கன்னியம்மா உட்கார்த்தி வைக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/306&oldid=1050423" இலிருந்து மீள்விக்கப்பட்டது