பக்கம்:உத்தரகாண்டம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    309


இறங்குகிறார்கள்; பஸ் நிறுத்தத்துக்கு வெளியேறும் கும்பலுடன் கலந்து கொள்கின்றனர். விளக்குகளைச் சுற்றிப் பூச்சிகள்... கன்னியம்மாளின் கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருக்கிறாள். படி ஏறி இறங்கி வருகையில், எழும்பூரில் கண்ட பையன், அந்தப் பெண், இன்னும் அவர்களைப் போல் நாலைந்து பேர்கள்... இவங்களும் எங்கே போகிறார்கள்? அவர்கள் இந்தியில் பேசிக் கொண்டு முன்னே நடக்கிறார்கள்.

கசகசவென்ற பஸ் நிறுத்தம்.

“ஏம்பா, புதுக்குடி போற பஸ்...”

“இல்ல... நாகபட்ணம், திருவாரூர்” என்று ஏதேதோ பேர் சொல்கிறான். “கும்மாணம் பஸ் போயிடிச்சி. இனி காலம நாலுமணிக்குத்தான்...”

பஸ் நிறுத்தத்தின் பக்கம், இரவு கடைகளில் சொய்யென்று தோசை போடுகிறான். கூட்டம் மொய்க்கிறது. உறுமி விளக்கடிக்கும் பஸ்கள். குடிக்க, கழுவ தண்ணீரில்லை. கீழே சகதியாக ஈரித்த கும்பி அழுக்கு.

கழிப்பறையில் இயற்கைக்கடன்-வெளியேற்ற முடியாத நாற்றம். கன்னியம்மா, அந்தத் தங்கும் கூடத்தில் ஓர் இடம் பிடித்து உட்கார்த்தி வைக்கிறாள். இரண்டு வாழைப்பழம் வாங்கி வருகிறாள். சூடான பால் என்று விரல் நீள தம்ளரில் இனிப்பாகக் கொண்டு வந்து கொடுக்கிறாள். காலையில்... காலையில் போய்விடலாம். “முருகா... இந்த அத்தினி சனங்களையும் கரையேற்று!” கண்களை மூடுகிறாள்.

கன்னியம்மா யாரிடமோ விசாரிப்பது செவிகளில் விழுகிறது.

“கண்ணமங்கலமெல்லாம் போவாதம்மா. புதுக்குடியே போவுதோன்னு சந்தேகம். அங்கெல்லாம் ஒரே கலவரம். பஸ்ஸையே மறித்து நிறுத்தி, வெட்டிப் போட்டுட்டானுவ!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/311&oldid=1050433" இலிருந்து மீள்விக்கப்பட்டது