பக்கம்:உத்தரகாண்டம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314   ✲   உத்தரகாண்டம்


காவலன் இடைமறித்து, “ஏதேதோ கதை சொல்லுதுகள்” என்று அவசரப்படுகிறான்.

“கதை இல்ல, தம்பி நிசம்... தியாகி எஸ்.கே.ஆர். அவுங்க காலத்துலதான் அழகாபுரின்னு பேரு வச்சாங்க. நிலமெல்லாம் வினோபா வந்தப்ப பூதான இயக்கமா, அந்தக் குடிமக்களுக்கே எழுதி வச்சாருங்க... சரோஜினி அம்மா. அவரு அப்பாவுக்கு ஒரே வாரிசு...” கண்கள் கசிகின்றன.

“என்ன பேரு சொன்னீங்க?”

“தியாகி எஸ்.கே.ஆர். சின்னி கிருஷ்ணன் அப்பா, இவுரு பேரு இராம சந்திரன். எஸ்.கே.ஆர்னா எல்லாருக்கும் தெரியும்.”

“நீங்க அவுங்களுக்குச் சொந்தமா? இந்தப் பொண்ணு யாரு..?”

“அவுங்க நிழலை அண்டி, சத்தியக் குடையில் மூணு தலைமுறையா வாழ்ந்தவ. காந்தி சொன்ன பிறகு, வாழ்ந்து பெத்த ஒரே மக போயிடுத்து, அம்மா அய்யா எல்லாம் போயிட்டாங்க. எம் பேத்தி இது. அங்க நாட்டு நடப்பு, மக்கமனுசங்க எதும் புடிக்கல. இத்த ஒரு கலியாணம் கட்டிவச்சே. அவ... பாவி, கூசாம, செய்யாத அக்கிரமமெல்லாம் செய்யிறான. பச்சையா இருக்கிற மண்ணுன்னு வந்தே, இங்கியும் எரிஞ்சி கெடக்கிது... ஒண்ணுமே புரியலங்க...”

“சரி, சரி, அழுவாத இந்த மூட்டைய வாங்கி வையிப்பா. சைகிள எடுத்திட்டுப்போயி, புதுக்குடி ஒட்டல்லந்து பிளாஸ்கில் காபியும் பத்து இட்டிலியும் வாங்கிட்டு ஜல்தி வா!” ஒரு நூறு ரூபாய் நோட்டை வைக்கிறான். சரி என்று மறுபடியும் விறைப்பாக ஒரு வணக்கம். தெரிவித்துவிட்டுப் போகிறான். அப்போதுதான் இன்னும் இரு காவலர்கள் சைகிளில் வந்திறங்கி வணக்கம் தெரிவிக்கின்றனர்.

“பெரிம்மா, நீங்க இருங்க..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/316&oldid=1050440" இலிருந்து மீள்விக்கப்பட்டது