பக்கம்:உத்தரகாண்டம்.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்   ✲    325
 


“ட்யுப் வாங்கிட்டு வந்து பொருத்தினியா? எப்ப?” என்று அவர் கேட்கிறார். “மத்தியானம் சைக்கிள்ள புதுக்குடி போயி வந்தேன்” என்று அவன் சொல்கிறான். உயர, காந்தி படம்... அய்யா படம், அவருடைய தாயார், தகப்பனார் படங்கள் இருக்கின்றன.

“நாமட்டும் இந்த வூட்டுல அதே குடும்பத்தின் தலை முறையாக இருக்கிறேன்...”

“அப்ப பொம்புளங்க யாரும், இல்லய்யாய்யா?”

“பொம்புள ஆம்புள ஆரும் இல்ல. சம்சாரம் போயிட்டா. மூணு புள்ள, ஒரு பொண்ணு. பொண்ணும் போன வருசம் தவறிப்போயிட்டா. ஒரு புள்ள டெல்லில இருக்கிறான். ரெண்டுபேர் யு.எஸ்.ல இருக்காங்க. பேத்தி, மகவயித்துப் பேத்தி வந்திருக்கா. விவசாய, விதை வீரிய விதைன்னு ஆராய்ச்சி பண்ணி அமெரிக்கால பட்டம் வாங்கியிருக்கா. இப்ப இங்கே வந்திருக்கிறா. ஹைதராபாத்ல வேலை எடுத்திட்டிருக்கா...”

“கலியாணம் கட்டலியா?...”

“இந்தக் காலத்துல, அவங்கவங்க சொதந்தரம்... தவுர, கலியாணம் பண்ணி நகை நட்டப் போட்டுக்கிட்டு, புருசன் கூட ஜாலியா இருக்கணுன்னுற ஆசையவுட, இந்த மாதிரி இளந் தலைமுறைகள், புதுசான சமூக உணர்வோட செயல்படுறாங்க. எல்லாரும் புதிசா விஞ்ஞானம் படிச்சாலும், ஆகாசத்துல பறக்கிறதோ, அணு யுத்தம் பண்ணுறதோ பெரிசுன்னு நினக்கல. இந்த நாட்டு வறுமைகள் ஏன் தொலையல, ஏன் வெட்டு குத்துன்னு வாராங்க? ஏன் இந்தப் பன்னாட்டு முதலைகளுக்கு இரையாறாங்கன்னு சிந்திக்கத் தொடங்கிட்டாங்க. இன்னிக்கு இந்த கிராமங்கள் தேடி வந்திருக்கு ஒரு கூட்டம். நீங்க பாத்திருப்பீங்களே? அங்கே சம்பாதிச்சி, நிதி திரட்டி, தாய் நாட்டு சமூக சேவைக்கு வந்து செயல்படுறாங்க.”