பக்கம்:உத்தரகாண்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    31


“அப்ப வரேம்மா... வணக்கம்...” வந்தது போல் திரும்பிச் செல்கிறான்.

ரங்கன் பின்னால் வழியனுப்பச் செல்கிறான்.

“அய்யாவப் பார்க்கணும்னு வந்திருக்காங்க. சொல்லி அனுப்பிச்சாங்க. நீங்கதா வந்தவங்களை...” சொல்லத் துணியாமல் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறான்.

“நீ ஒண்ணும் எனக்கு வெளக்கவாண்டாம். டிபன் காரியர் சோத்தை எங்கே கொண்டு போனியோ, அங்கேயே இதெல்லாம் கொண்டுபோ! பாவப்பட்ட சோறு பண்டம் பழம் எதும் இங்கே வாணாம்.”

உள்ளத்தின் ஆழத்தில் எங்கோ நீறு பூத்து அவிந்தாற் போல் கிடந்த பொறி கிளர்ந்து பொறிப் பொறியாய்ச் சுடர்ந்து தகிக்கிறது.

இவன், போலீசு சரியில்லை என்று இழுத்து மூடுகிறான். போலீசு, எங்கிருந்து வந்ததுடா? ஆட்சிக்காரனை மீறிப் போலீசு எதற்குடா, ஏழையை அடித்துக் கள்ளச்சாராயம் காய்ச்சச் சொல்லுறான்? ‘மாமூல்’னு யாருக்கடா வாங்குறான்? படுபாவிகள் சுதந்தர நாள், காந்தி ஜெயந்தின்னு அடுக்கடுக்காக் கொண்டாடுறான்! தாய்க்குலம், அன்னைக்குலம்னு, பேச்சுக்குப் பேச்சு பூசுறான். பாவிக, எத்தினி பொண்ணுங்களைத் தொட்டு சீரழிக்கிறானுவ! அந்தக் காலத்து நாடக மேடைகளில், சுந்தராம்பா, கிட்டப்பா, விசுவநாத தாஸ்னு பாடினாங்க. அப்பவும் போலீஸ் இருந்தது. நாடகக்காரன் குடிப்பான். விடிய விடியப் பாட்டுப் பாடி பேசி நடிப்பான். மேடையில் பெண்ணுங்களைத் தொடக்கூட மாட்டாங்க. அப்படி நடித்த ஜோடிகள் கூட, நிசவாழ்க்கையில் கற்பு விரதம் காத்ததுண்டு... தெரிந்தும் தெரியாமலும், கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்பவன், மனச்சாட்சியை ஒட்டு மொத்தமாகத் துடைத்தவன்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/33&oldid=1049419" இலிருந்து மீள்விக்கப்பட்டது