பக்கம்:உத்தரகாண்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32   ✲   உத்தரகாண்டம்


புரவலராம், அண்ணாச்சியாம்! யாருக்குப் புரவலர்? புரவலர், புலவர் எல்லாம் ஒண்ணுதானா? என்ன இழவோ, யார் கண்டார்கள்? எல்லாருக்கும் பட்டம்.

“ஆச்சியம்மா?...” இப்படிக் கூப்பிடுபவள் சங்கரிதான்.

“ஒரு வாழஇல தரீங்களா? சம்முகம் வந்திருக்கிறான். ஊருக்குப் போறான். சோறு கட்ட ஒரு எல வேணும்...”

“தரேனே?...”

விடுவிடென்று உள்ளே செல்கிறாள். கிணற்றடி முற்றம் அகலமானது. அதற்கு அப்பால் கழுவும் நீர்வீணாகாமல் இருக்க வைத்த வாழை. மொந்தன், குலை தள்ளி இருக்கிறது. கன்றிலிருக்கும் இலையை இழுத்து, வேலி வழி வந்த ஆடோ மாடோ கடித்திருக்கிறது. எம்பி, கத்தியால் அவளே ஒர் இலையை அரிகிறாள். பால் சொட்டுகிறது.

“மெள்ள... வெள்ள சீல, ஆச்சி. கரை விழுந்திட்டா போகவே போகாது...” சொல்லிக் கொண்டே வாங்கிக் கொள்கிறாள்.

“எதுக்கு இத்தினி பெரிசு? சோறொண்ணும் வாணாம் அத்தைன்னுதா அவஞ்சொல்லுதா. எனக்கு மனசு கேக்கல. இம்புட்டுப் புள்ளயா இருக்கறப்பவே அவம்மா விட்டுப் போட்டு ஆபீசுக்குப் போயிடுவா. புனாவிலதா அப்ப இருந்தம். இப்ப அண்ணனும் மதனியும் டில்லிக்கு அந்தால இருக்காங்க. சம்முவத்துக்கு இங்கதா, பக்கத்துல பொத்தூர்ல இன்ஜினிரிங் காலேஜில எடம் கிடைச்சி, படிப்பு முடிச்சிட்டுப் போறான். ஒட்டி வளர்ந்த புள்ள. இனி செறகு முளச்சி எங்கோ பறந்து போகும்...”

“அண்ணம்புள்ள, பாசமா வச்சிருக்கே. பாசமா இருக்கும்மா, வருத்தப்படாத!” என்று இவள் ஆறுதல் சொல்கிறாள்.

“நானே சொல்லிக்கக்கூடாது ஆச்சி. புனாவிலை இருந்தப்ப எங்கண்ணன் அப்பப்ப சிகரெட் குடிக்கும். பார்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/34&oldid=1049420" இலிருந்து மீள்விக்கப்பட்டது