பக்கம்:உத்தரகாண்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    35


கைத்தறித்துண்டும், வாழைப்பழமுமாக வந்தான். பழத்தை வைத்துவிட்டு, ‘நமஸ்காரம்’ என்று பணிந்தான்.

“வாங்க... உக்காருங்க...” என்றவர் மெதுவாகத் தலையணையைச் சரி செய்து கொண்டு உட்கார்ந்தார்.

“எப்பேர்ப்பட்ட தியாகி நீங்கள்? உங்கள் தியாகங்களில் நாங்கள் வாழ்கிறோம்... நீங்கள் இங்கே ஊர் உலகம் தெரியாமல் இருக்கிறீர்கள் என்றறிந்ததும் நான் கண்ணீர் விட்டேன்...”

இப்படிச் சொல்லிக் கண்களைத் துடைத்துக் கொண்டு அந்தக் கைத்தறித் துண்டை, வணக்கத்துடன் அவர் கைகளில் வைத்தான்.

“இதெல்லாம் இப்ப எதுக்கு? நீங்க...”

“சொல்றேன். எங்களுக்குப் பூர்வீகம் கேரளம்னு சொல்லுவாங்க. ஆனால் தாத்தா காலத்தில் மகாராஷ்டிரம் போயிட்டாங்க. தாத்தா, திலகரின் கேஸரியில் இருந்தாராம்... எல்லாரும் போயிட்டாங்க. எங்கம்மா கன்னடம். அவங்கப்பா யுத்த காலத்தில் கன்ட்ராக்ட் எடுத்து நிறையச் சம்பாதித்தாராம். எங்கப்பா அநாதை போல் அவர்கள் குடும்பத்தை அண்டி படிச்சு, மகாத்மா சொன்ன மாதிரி ஜாதி மத பேதமில்லாம வாழனும்னு லட்சியம் வச்சிருந்தார். அந்த நடவடிக்கைக்காகவே, சாதி வெறியர்கள் அவரை ஒரு நல்ல வயசில் வெட்டிப் போட்டுட்டாங்க. எங்கம்மா என்னை அழைச்சிட்டு யு.பிக்குப் போய், மகாதேவி வர்மா தெரியிம்ல? அவுங்க கல்வி ஸ்தாபனத்தில் இருந்து என்னைப் படிக்க வச்சாங்க. எனக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டில், இளைஞர்களை அறிவியல் கல்விபெற வாய்ப்பளிக்க நல்ல பள்ளிக் கூடம் வைக்கணும்னு ஆசை. ஆசை என்ன, இலட்சியமே அதுதான். உங்க குருகுல நிர்வாகி, பராங்குசம் எங்க வித்யா பீடத்துக்கு வந்திருந்தார். அவர்தான் இங்கே வந்து நீங்கள் கல்விப்பணி செய்யணும்னு சொன்னார். நான் நேராக இங்கே உங்களைப் பார்க்க வந்திட்டேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/37&oldid=1049423" இலிருந்து மீள்விக்கப்பட்டது