பக்கம்:உத்தரகாண்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    37

செல்வான். பிறர் பார்க்கும் போது மிக மரியாதையாக அவளிடம் நடந்து கொள்வான். அய்யாவும் அவனும் பேசும் போது அவள் கேட்கக் கூடாது என்று கருத்தாக இருப்பான். போகும் போது அவளை உறுத்துப் பார்த்து உறுமுவது போல் கருவிக் கொண்டு செல்வான். அவனுடைய சந்தனக் கீற்றும், காவி வண்ணக் கதர் சட்டையும் அந்த நடப்பின் கபடங்களை மூடும் வேசம் என்று தோன்றும்.

பள்ளிக்கூடம் விட்டு விட்டார்கள் போல் இருக்கிறது. தொங்குபைகள் ஆட, கோழிக்குஞ்சுகளைப் போல் பிள்ளைகளை அடைத்துக் கொண்டு தடதடவென்ற சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் வண்டி ஓடுகிறது. உதிரிகள் போல் ஆட்டோ ரிக்சாக்களில் சில குழந்தைகள் செல்கின்றன. சொர்ணம் ஒரு பிஞ்சை இடுப்பில் ஏற்றிக் கொண்டு, கையில் புத்தகப்பை, தண்ணீர் குப்பி வகையறாக்களுடன் வருகிறாள். சொர்ணத்தின் புருசன், மாதா கோயில் பக்கச் சந்துக் குடிசைக்காரன். ரிக்சா ஓட்டிக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அவனுக்கு ஒரு பெண் சாதி இருக்கிறாள் என்று தெரியாமல், இவளையும் சேர்த்துக் கொண்டான். அவன் குடித்தான். இவள் இட்டிலிக்கடை போட்டுக் குடிக்கக் காசு கொடுத்தாள். கரைவேட்டிக் கட்சிகள் ரிக்சாக்காரர் சங்கம் இவனை ஒரு நல்ல குடிமகனாக்கி, தேர்தல் காலங்களில் ஆட்டோரிக்சா வாங்கும் கனவை வளர்த்தன. கைவசம் இருந்த ஓட்டை ரிக்சாவும் பறிபோக, குடித்துக் குடித்துச் செத்தான். நல்ல வேளையாகக் குழந்தை இல்லை...

படி தாண்டிப் போகுமுன் இவளைப் பார்த்துக் கொண்டு திரும்புகிறாள். “அம்மா, கொஞ்சம் குடிக்கத் தண்ணீதாங்க. இந்த வருசம் என்ன இப்படிப் பூமி காயுது, இன்னும் பங்குனியே பிறக்கல...”

இவள் உள்ளே செல்கிறாள். இன்னும் சாப்பிடாமலே நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த உணர்வு பசியாய்க் கிளர்ந்தெழுகிறது. தண்ணீரைச் செம்பில் எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/39&oldid=1049425" இலிருந்து மீள்விக்கப்பட்டது