பக்கம்:உத்தரகாண்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46   ✲   உத்தரகாண்டம்

சந்தோஷம் சொல்லி முடியாது. வெளியெங்கும் சிநேகம் நிறைஞ்ச ஜனங்கள். என் அநுபவங்களே மறுவடிவம் எடுத்தப்ப எல்லாரும் எனக்குப் பிரியப்பட்டவர்களானார்கள். பிரேமையை நான் கல்யாணம் செய்து கொண்டேன். எண்டே பையனுக்கு அச்சன் நாராயணன் பெயர்தான். பிரேமை, நான் பத்திரிகையில் எழுதியதைப் பார்த்து, என்னைத் தேடிவந்தவள். காலமே எல்லாம் செய்து கொடுத்திட்டு ஆஸ்பத்திரி ஜோலிக்குப் போகும்...”

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ந்து அநுபவிக்கும் ராமுண்ணி தான் ராதாம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் எல்லோரும் பம்பாய் சென்றிருந்த போது ஒருநாள் பதறிப்போய் வந்தார்.

“தாயம்மா அக்கா?... நாள் கேள்விப்படுவது நிசமா?... மோளுக்கு லுகேமியாவாமே?”

அந்தப் பெயர் சடைப்பூரான் போல் செவிகளில் நுழைந்தது.

“ஐயோ இதென்ன ஒரு சோதனை? தியாகி சாருக்கு, சரோஜினி எடத்திக்கு இப்படி ஒரு சோதனை வருமா? எனக்கு நேத்து, ஒரு சினிமாக்கதைக்கு வசனம் எழுதணும்னு நடராசன் வந்து கூப்பிட்டான். அப்ப உங்க மகனப் பத்திப் பேச்சு வந்திச்சி. அவுரு படத்தில ஒரு சில்லறை வேசமிருக்கு, வரீங்களான்னு கேட்டாரு. ‘ஐநூறு, ஆயிரம்னாக்கூட எனக்குக் காசுதான். அதுக்காக, நான் எந்த ஒரு இடத்துக்கும் போய் நிக்கத் தயாராயில்ல’ன்னேன். அப்பத்தான் அவன் சொன்னான், இந்த மாதிரின்னு; உங்க மகன், ஒரு பெண் சாதி குழந்தைகன்னு இருக்கையிலே, இன்னொண்னும் கட்டி, அரசியலில் இருக்கிறவங்களுக்கெல்லாம் ஒழுக்கம் தேவையில்லன்னு ஒரு சட்டமால்ல வச்சிட்டாங்க ? இப்பக்கூட, புதுசா பின்னணி பாடுற ஒரு பொண்ணுகூ...அடசீ! அதவிடுங்க. நீங்க, பெத்தபுள்ள, அவர் பதவி, பணம், செல்வாக்கு எல்லாத்தையும் ஒதுக்கிட்டு இருக்கிறது எவ்வளவு பெரிய விசயம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/48&oldid=1049434" இலிருந்து மீள்விக்கப்பட்டது