பக்கம்:உத்தரகாண்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், தொண்ணுறுகளின் பிற்பகுதியில் இந்திய சுதந்தரத் திருநாளின் பொன்விழா கொண்டாடப்பட்டது. முதல் சுதந்தரத் திருநாளின் பரவச உணர்வுகளை, அநுபவித்த அந்நாளை மக்கள், அன்றைய மகிழ்ச்சி அநுபவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூடப் பிரதிபலிக்காத கொண்டாட்டத்தைக் காண்கையில், பழைய நினைவுகளையே அசைபோடுவது தவிர்க்க இயலாததாக இருந்தது. புதிய தலைமுறைகள், நுகர்பொருள் வாணிப அலையிலும், சினிமா, சின்னத்திரை மாயைகளிலும், வெளிநாட்டு வாய்ப்புகளைத் தேடி, நுழைவுக்கான அனுமதிதேடி அந்த அலுவலக வாயில்களில் இரவு பகலாகத் தவம் கிடக்கும் உறுதி நிலையிலும், தங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தன. நடுத்தர வர்க்கம் என்று அடையாளமிடப்பட்ட வர்க்கம், அன்றாடம் ஏறும் விலைவாசிகளிலும் தேவையில்லாப் பொருட்களின் ‘திணிப்பு’ தேவை நெருக்கடிகளிலும் வரவுக்கும் செலவுக்கும் தாக்குப்பிடிக்க இயலாமல், ‘உபரி’ வருமானங்களுக்காகச் சத்தியங்களைத் தொலைப்பதுதான் தருமம் என்று பழக்கப்பட்டுவிட்டிருந்தது. வறுமைக்கோடு மேலே மேலே உயர்ந்து, மக்கள் தொகையின் அதிக விழுக்காட்டைத் தன் வரையறைக்குக் கீழே தள்ளிக் கொண்டிருந்தது. அந்த அடித்தளத்துக்கு இன்றியமையாத தேவைகளாகப் பெருகியிருந்த சாராய, சூது, பெண்வாணிப விவகாரங்கள், கோட்டு வரையறை கடந்த உச்சாணிவரை கோலோச்சிக் கொண்டிருந்தன. நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக அழிவுகள் சாம்ராச்சியப் படையெடுப்பையும் விஞ்சிக் கொண்டிருந்தன. நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/5&oldid=1022961" இலிருந்து மீள்விக்கப்பட்டது