பக்கம்:உத்தரகாண்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50   ✲   உத்தரகாண்டம்


கரப்பான் பூச்சியைத் தொட்டுவிட்டாற்போல் இருக்கிறது. இருட்டு அறையில் பட்டாம்பூச்சி பறக்காது. கரப்பான் பூச்சி...

சிவலிங்கம் அவள் கண்களில் வெகு நாட்களாகப் படவில்லை. அன்றையப் பொழுதில் அவள் பார்த்த மனிதர்கள், சந்திப்புகள், துக்கத்துக்குச் சென்ற இடத்தில் வந்து விழுந்த செய்திகள்...

எதையுமே அவளால் சீரணம் செய்து கொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வந்ததும், கிணற்றில் இருந்து நீரிறைத்து, வாளி வாளியாக ஊற்றிக் கொள்கிறாள். சாயபு... ஒரு பந்தம் போய்விட்டது.

ராமுண்ணி, உடம்பு சரியில்லாமல், நடக்க முடியாமல் படுத்திருப்பதாக, சாயபு தான் வந்து சொன்னார். அவருடனே அவள் பழைய மாம்பலம் வீட்டில் பார்க்கச் சென்றாள். சாக்கடையும் கொசுக்களும் நிறைந்த பகுதியில் ஒரு பழைய ஓட்டு வீட்டில் இருந்தார். அவர்கள் சென்ற போது, பையன் பள்ளிக் கூடம் சென்றிருந்தான். பிரேமா, அவள் பணி புரிந்த ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தாள்.

“குனிஞ்சு வாங்க தாயம்மா, இந்த வாசல் இடிக்கும்” என்று அவர் எச்சரித்த குரல் கேட்டு, நாடாக் கட்டிலில் படுத்திருந்த ராமுண்ணி எழுந்து உட்கார்ந்தார். சிரித்தார்.

“இந்த நாட்டின் சிறந்த மனிதர்களை, உயர்ந்த மனிதர்களைத் தலை குனிய வைக்கும் வாசல் இது.”

சாயபுவும் சிரித்தார். பையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களையும் பிஸ்கோத்துப் பொட்டலத்தையும் அருகில் இருந்த சுவரலமாரியில் வைத்தாள். சாயபு கட்டிலில் ஒரு பக்கம் உட்கார்ந்தார். “உட்காருங்கம்மா?” என்று அவளை உபசரித்தார்.

“மூணு மணிக்கு பிரேமை வந்திடுவா. அந்த நாற்காலிய இழுத்திட்டு உட்காருங்க...”

எப்போதும் மகிழ்ச்சி பொங்கிப் பூரித்து வரும் முகம், சோக உருவமாக இருந்தது. பேச்சே எழவில்லை. சிறிது நேரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/52&oldid=1049463" இலிருந்து மீள்விக்கப்பட்டது