பக்கம்:உத்தரகாண்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52   ✲   உத்தரகாண்டம்

இருப்பார். அவருடைய படம் கூட இன்றும் மாடியில் உள்ள படங்களிடையே இருக்கும். அந்தப் பாட்டன் முன்பே இறந்துவிட, பாட்டி காது தொள்ளையாக, உருத்திராட்ச மாலைக் கழுத்தாக, வெற்றுக்கைகளாக மாறிப் போனாள். இங்கிருந்த பனந்தோப்புகளில் கள்ளுக்காகக் கலயங்கள் கட்டக் கூடாதென்று, அம்மாவோடு பாட்டியும் சின்னம்மா, பெரியம்மா என்ற சொந்தங்களும் கூடக் காவல் இருந்திருக்கிறார்கள்.

பர்மா அகதிகள் வந்திறங்கிய போது, இது புகலிடமாக மாறியது. தொண்டர்கள் குழந்தையும் குட்டியுமாக இங்கே அழைத்து வருவார்கள். இங்கே கொல்லையில் கோசாலை இருந்தது. பால் கறப்பதும், தயிர் கடைவதும், வீட்டில் தவலை தவலையாக வடிப்பதும் குழம்புக்கு உரலில் மசாலை அரைப்பதுமாக நித்திய கல்யாணம். பூந்தமல்லிப் பக்கமிருந்து ஓர் ஐயங்கார் சுவாமி தையல் இலை கொண்டு வருவார். ஆயிரக்கணக்கில் வாங்குவார்கள். சாலை முழுதும் ஆலமரங்களில் இருந்து விழும் இலைகளைச் சுத்தம் செய்து, ஈர்க்கு ஒடித்துத் தைக்கும் தொழிலில் சீவனம் செய்தார்கள்... இப்போது?

பூதான முனிவர் வந்த போது பலரும் ஓடியொளிந்தார்கள். அய்யா, பொன் விளையும் பூமியை, இல்லாதவர்களுக்கென்று வழங்கினார். இப்போது அப்படி அவர் வழங்கிய காவேரி ஆற்றுப்பாசனத்து விளை நிலங்களை அரசியல்வாதியான மேல் சாதி ஆதரவுடன், எவனோ அநுபவிக்கிறானாம். இவள் செவிகளில் எத்தனையோ செய்திகள் விழுகின்றன. குருகுல வித்யாலயா வளைவில் அவள் கால் வைத்து எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. இந்த வீடு, சுற்றுப் புறங்களெல்லாம் ‘டிரஸ்ட்’ என்றுதான் செய்திருக்கிறார்கள். மகளின் பிரிவுத் துயரம் தாங்காத சரோஜினி அம்மை, ஓராண்டுக்கு மேல் இருக்கவில்லை. அவர்கள் இருவரும் போன பின், அய்யா சிறகொடிந்த பறவையானார். அவர்கள் போனது மட்டுமில்லை; இந்த நாட்டு அரசியலில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/54&oldid=1049466" இலிருந்து மீள்விக்கப்பட்டது