பக்கம்:உத்தரகாண்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    53

அவர்கள் கண்டிருந்த கனவுகளும் நொறுங்கிப் போனதுதான்.

ராதாம்மாவுக்கு அவள் காலமான போது ஒரு பையன் இருந்தான். அய்யாவைப் பார்க்க அந்த மருமகன் ஒரே ஒரு தடவை வந்தார். “குழந்தை நல்லாயிருக்காங்களா?” என்று மட்டும் துக்கம் தொண்டையடைக்கக் கேட்டாள். அவள் அவரை நன்றாக நிமிர்ந்து பார்த்ததாகக் கூட நினைவு இல்லை. அவள் திருமணம் முடிந்ததும், மஞ்சட் கதர்ச் சேலையும், பூமாலையும் தாலியுமாக, அதே மாதிரி கதர் வேட்டி உடுத்திய மருமகப்பிள்ளையிடம் அவளை அறிமுகம் செய்வித்ததை எப்படி மறப்பாள்? “எங்க தாயம்மா. அம்மா எங்கே போவாங்களோ, வருவாங்களோ, நேரம் தவறாமல் என்னை ஊட்டி வளர்த்தது தாயம்மா தான். இந்த வீட்டுக்கு எப்போதும் உயிர் தரும் தாயம்மா. இந்தச் சரணாலயத்தில் எத்தனை பறவைகள் வந்தாலும் தாயம்மா கவனிச்சிப்பா” என்று சொன்னதும் அவர்கள் இருவருமாக அவளைப் பணிந்ததும், சிறிதும் நிறம் மாறாத காட்சி.

இந்தச் சரணாலயம் வெறுமையாகிவிட்டது. அறங்காவலர் குழுத்தலைவன் பராங்குசம்தான். அய்யாவின் மறைவுக்குப்பின், கீழிருந்த மரப்பீரோக்கள் முதல், படங்கள் புத்தகங்கள் எல்லாமே மாடிக்குப் போய்விட்டன. பெரிய பாத்திரம் பண்டங்கள் எல்லாமும் போய்விட்டன. கூடத்தில் காந்தி படமும், பெரிதாக்கப்பட்ட அம்மாவின் படமும், ராதாம்மாவின் படமும் ஏற்கெனவே இருந்தன. அய்யாவின் படத்தையும், குருகுலத்தில் இருந்து கொண்டு வந்து மாட்டச் சொன்னாள். அய்யா இருந்த போதும் மறைந்த பின்னரும் வெள்ளிக்கிழமை மாலைகளில் பிரார்த்தனை பஜனை நடந்து கொண்டிருந்தது. பின் ஒவ்வொருவராக... பர்மா நிக்கொலஸ், சாயபு, ராமுண்ணி, குஞ்சும்மா, சுபலட்சுமி, ராமசுப்பிரமணியம்... பிறகு... ஏதோ வசந்த காலச் சாரல் போல் பக்கத்தில் வந்து குடியிருந்த மிலிடரிக்காரர்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/55&oldid=1049468" இலிருந்து மீள்விக்கப்பட்டது