பக்கம்:உத்தரகாண்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    55

போக முடியும். பின்புறம் புற்றுக் கோயில் வரை எல்லை இருந்தது.

இந்த வீட்டுக்குள் வந்து, படங்களின் கீழிருந்த பெஞ்சியில், காலையில் பூத்த பூக்களைக் கொண்டு வைப்பார். காசித்தும்பை, ஒற்றை, இரட்டை என்று வண்ண வண்ணமாகப் பூத்துக் குலுங்கின. செம்பருத்திச் செடிகள், கன்றாகவே கொண்டு வைத்திருந்தார். வாசல் பக்கம், ஒரு மூங்கில் பிளாச்சுக்கதவுதான். வாசலில் ஒரு சாய்வு நாற்காலி-துணி போட்டு மடிக்கக் கூடியது, அதைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து ஏதேனும் படித்துக் கொண்டிருப்பார். உள்ளே அவர் சமைத்துச் சாப்பிட்டதில்லை. தெருநாய்க்குட்டி ஒன்று அவரைச் சுவீகாரம் செய்து கொண்டிருந்தது. காலையில் அவர் நடந்து போனால் அதுவும் போகும். அது ஆறு மாதத்தில் பெரிய நாயாக வளர்ந்துவிட்டது.

“இங்கே வெள்ளிக்கிழமை பஜனை செய்வீங்களாமே?” முதல் நாளே அவர் கேட்டார்.

“ஆமாங்கையா. அய்யா எத்தனை வருசமாகவோ நடத்திட்டிருந்தாங்க. அவரு போனப்புறமும், அவங்கல்லாம் வராங்க. யார் வந்தாலும் வராவிட்டாலும், சாயபு அய்யாவும் குஞ்சம்மாவும் விடாம வருவாங்க...” என்றாள்.

அடுத்த வெள்ளியன்று வீடுகட்டும் வேலை முடிந்து அவர் சிநேகிதர் வீட்டுக்குப் போய்க் குளித்து, வெள்ளைச் சட்டை, பனியன் அணிந்து, ஒரு சைகிளில் ஒரு பானையையும், கொண்டு வந்தார். அன்றைக்கு நிறையப் பேர் பஜனைக்கு வந்து இருந்தார்கள். நிக்கலஸ், சந்தானம், ராமமூர்த்தி, என்று வராதவர்களும் வந்திருந்தார்கள். அவருடைய பஞ்சாபி நண்பன் சிங், அவர் மனைவி, இரண்டு குழந்தைகளும் வந்திருந்தார்கள். அந்தக் கல்லூரி வளாகத்தில் இருந்து வந்திருந்த ராமசாமி ”ஸார், ரொம்ப நல்லாப்பாடுவார். கடம் வாசிப்பார்; மிருதங்கம் வாசிப்பார்...” என்று சந்தோசமாகச் சொன்னார். சிங் உடனே, “வெஸ்டர்ன், இந்துஸ்தானி, எல்லாம் பாடுவாங்க!” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/57&oldid=1049474" இலிருந்து மீள்விக்கப்பட்டது