பக்கம்:உத்தரகாண்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அறிவியல் மேம்பாடுகள், ‘ராக்கெட்’ ஏவுகணை, விண்வெளி ஆய்வு, வீரிய விதைக்கண்டுபிடிப்பு என்ற சாதனையாளரால் மட்டும் பெருமை பெறவில்லை. இத்தகைய தொழில் நுட்பங்கள், உலகளாவிய மோசடிகளாலும், பெண் வாணிபங்களாலும் ‘வாணிபம்’ நடத்தும் அளவுக்கும் ‘பெருமை’ பெற்றிருக்கின்றன.

இந்தச் சூழலிலும், அரசியல் கட்சிகளின் பதவி பிடிப்புக் கூட்டணிச் சதுரங்க ஆட்டக்காய் நகர்த்துதலின் இடையே ஒரு முக்கியப் புள்ளியாக, சுதந்தரப் பொன்விழா அரங்கேற்றப்பட்டது. புத்தாயிரம், புதிய நூற்றாண்டு என்ற எதிர்பார்ப்பும் இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஒரு விறுவிறுப்பூட்டியது. அரசு சார்ந்தும், சாராமலும், சேர்ந்து கிடந்த மேற்பரப்புக்கு ஒரு ‘காபி’ குடிக்கும் விறுவிறுப்பு உற்சாகம் ஊட்டியது. சின்னத்திரை, பெரிய திரைகள், பத்திரிகைகள், நட்சத்திர இரவுகளை உருவாக்கி, தேசபக்திப் பாடல்களை அரங்கேற்றின. கண் பார்வையும் மங்கி, செவிப்புலனும் கூர்மை குறைந்து, இக்கால நடப்பியலுக்குச் சிறிதும் தொடர்பில்லாமல், வாழும், சுதந்தரப் போராட்ட கால முதியவர்களைத் தேடிப் பிடித்து, அவர்கள் அரை குறையாக உதிர்க்கும் நினைவுகளைப் பதிவு செய்து மக்கள் தொடர்பு சாதனங்கள் கடமையை நிறைவேற்றின. இந்தக் கொண்டாட்டங்களில், சுதந்தரப் போராட்ட நாட்களில் இருந்து தொடர்ந்து பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும், ஒரே இலட்சியத்துடனும் வேகத்துடனும் செயல்பட்டு வரக்கூடிய ஒரு மனிதரைக்கூட அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில், ‘சுதந்தரம் வரும்’ என்ற விடிவெள்ளி உதயமாகும் போதே, நாடு துண்டாடப்பட்டதும், குறிக்கோள்களை எட்டும் பாதைகளில் இருந்து குறுகிய இடைவெளிகளில் போராளிகள் தள்ளப்பட்டதும் குழுக்களாகப் பிளவுகள் ஏற்பட்டதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாயின.

காந்தியடிகள் கண்ட சுயராச்சிய, கிராம ராச்சியக் கனவுகள், தனிமனிதத் தூய்மை, ஒழுக்கப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் அந்த வரையறைகள் மெல்ல மெல்ல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/6&oldid=1049319" இலிருந்து மீள்விக்கப்பட்டது