பக்கம்:உத்தரகாண்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58   ✲   உத்தரகாண்டம்

அவள் புருசன், இவன் மனைவி, அம்மா என்று குடும்பம் வைத்து ஊன்றிவிட்டான். ‘அம்மா’வின் நெருக்கத் தொடர்பு, தன்னைத் தவிர வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என்பது போல் நடந்தான்... ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அய்யா மிக நெருக்கமாக இவளிடம் உறவு பாராட்டுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் கவடும் சூதும் நிறைந்த தன்மையை அப்போதுதான் அவள் உணரத் தலைப்பட்டாள்.

5

“சின்னக்கா...”

கூடத்துக்குள் நுழையும் போதே குரல் கொடுப்பவளைக் கொல்லையில் இருக்கும் தாயம்மா புரிந்து கொண்டு விரைந்து வருகிறாள்.

வெயில் சுட்டெரிக்கிறது. “ஆயா, உள்ளே கீழே விழுந்திருக்கும் மாங்காயெல்லாம் எடுத்துக் கிடலாமா?” என்று பின் பக்கம் வேலிக்கப்பாலிருந்து ஒரு குழந்தை கேட்டது. எண்ணெய் கண்டு யுகமான முடி. புழுதி படிந்த மேனி. இடுப்பில் ஒரு அழுக்குக் குழந்தையுடன் இன்னொரு சிட்டு...

அந்தக் குழந்தைகள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்று அறிய வேண்டும் என்ற ஆவலுடன் “அதுக்கென்ன, எடுத்துத்தாரேன்...” என்று சொல்லும்போது, மேலிருந்து ஏதோ அவள் கையில் விழுந்ததும் நெருப்புத்துண்டு பட்டாற் போல் உறைத்ததும் திடுக்கிட்டு, கையைத் தேய்த்துக் கொண்டாள். அப்போதுதான் அந்தக் குரல் அவளை இழுக்கிறது. அவள் கிணற்றுக்கரை தாண்டி வரும்போது, ராசம்மாளே பின் நடை கடந்து வந்து விடுகிறாள். அவளுடன் ஒரு இளம் பெண், பேரப் பெண்ணா? தெரியவில்லையே?

“எப்ப வந்தே ராசம்மா? இது பரிமளத்தின் மூத்த மகளா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/60&oldid=1049482" இலிருந்து மீள்விக்கப்பட்டது