பக்கம்:உத்தரகாண்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    61

சண்டைகளில் குடும்பம் சிதறிச் சின்னாபின்னமானதும் காணப் பொறுக்காமலே மனமுடைந்து பெரியவரும், மனைவியும் போய்விட்டார்கள்...

வேர்க்க விருவிருக்க வெயிலில் வந்திருக்கிறாள். எங்கிருந்து நடந்து வந்தாள்?

இடையில் ஒரு எண்பது ரூபாய் நைலக்ஸ் சீலை. தாலிச் சரடு மட்டுமே உடம்பில் இருக்கும் நகை. நெற்றி, கன்னமெல்லாம் சுருக்கங்கள். இவள் கண்கள் துளும்ப உற்றுப் பார்க்கையில், அவள் “சின்னக்கா..!” என்று தழுவிக் கொள்கிறாள். விடுவித்துக் கொண்டு பானையில் இருந்து செம்பில் நீர் மொண்டு கொண்டு வருகிறாள்.

“உக்காரு, தாயி... கண்ணு உக்காரு...” ராசம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள், சீலை முன்றானையால் துடைத்தவாறு.

“இது சனிய, துடைச்சிக்கக்கூட உதவாது...” என்று சொல்லிக் கொண்டு செம்பு நீரைப் பருகி ஆசுவாச மடைகிறாள். “கண்ணு, பானையிலேந்து, இன்னுங் கொஞ்சம் தண்ணி கொண்டுவா...” என்று செம்பை மகளிடம் கொடுத்து விட்டு, சின்னக்கா, நீங்க உக்காருங்க!” என்று அந்த பெஞ்சில் உட்கார்த்துகிறாள்.

“காலம, எட்டு மணிக்கு நானும் இவளும் குடப்பேரி தாசில்தாராபீசுக்கு வந்தம்...” என்று சொல்லிவிட்டு அந்தச் செம்பு நீரில் பாதியைக் குடிக்கிறாள்- மீதியை, “நீ குடிச்சிக்கம்மா?” என்று சொல்லும்போது கண்களில் கரகர வென்று கண்ணீர் சுரந்து கன்னத்தில் வடிகிறது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“குடப்பேரி தாசில்தாராபீசா?... இங்கியா? மெயின் ரோடுக்கப்பால... பஸ்ஸ்டாண்டு தாண்டி...? அங்கதானே அந்த ஆபீசெல்லாம் இருக்குன்னு ரங்கசாமி சொன்னா?”

“ஆமா, சின்னக்கா. இவளுக்கு ஒரு சர்ட்டிபிகேட்டுக்காக வந்தே..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/63&oldid=1049491" இலிருந்து மீள்விக்கப்பட்டது