பக்கம்:உத்தரகாண்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    69

நா உசுர விட்டிருப்பேன்... வூட்டுல ஒரு ரேடியோ இருந்திச்சி. அத்தக்கூட அந்த மாட்டுவாகடம் எடுத்துப் போயிட்டா, பாவி. அன்னாடம் இவருக்குக் குடி சப்ளை பண்ணுறான்ல? சிலப்பா, ராவுல, கழுத்த நெறிச்சுக் கொன்னிட்டு, போலிசில போய் விழுந்திருவமான்னு தோணும்... ஆனா, இந்தப் புள்ளய ஓரிடத்துல சேக்கணும்... இதை நினைச்சிப் பொறுக்கிறேன்...”

“ஏம்மா, படிச்ச பொண்ணுதானே? இப்பல்லாம் டூசன் எடுக்கலாமே? இப்பதா- ரங்கசாமி கூடச் சொல்லுறான்- ஏழை பாழை, வயித்துக்கில்லாததுங்க கூட, ஸ்கூல் படிப்புக்கே ஒண்ணொன்னும் டூசன் இல்லாம சரிப்படலியே? இதா ரோட்டுப் பக்கம் ஒவ்வொரு தெருவிலும், கம்ப்யூட்டர், டூசன்னு புள்ளங்க போகுதுங்க. ரங்கசாமி அவம்புள்ளங்களுக்கு, அஞ்சாம்கிளாஸ், ஆறாங்கிளாசுக்கு மாசம் தலா நூறு ரூவா குடுத்து டூசன்னு சொல்றா. படிப்பு என்னமோ இலவசங்கறாங்க. ஆரம்பத்துல எழுநூறு எண்ணுறு கட்டனும். பின்னால மரத்திலேந்து மாங்காயும், தென்னமரத்துத் தேங்காயும் கொண்டு வித்தெடுத்துக்கிறான். போகட்டும்னு நானும் எதும் கேட்டுக்கிறதில்ல... டூசன் எடுக்கலாமேம்மா?”

இது புதிய வயிற்றெரிச்சலைக் கிளப்பி விடுகிறது.

“அதையேன் கேக்குறீங்க சின்னக்கா? இவ படிப்பு, பத்தாதாம். ‘மாத்ஸ்’ அதா கணக்கு பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி படிச்சிருக்கணுமா. இவ, அப்ப அதுதா கெடச்சது. படிச்சா. பர்ஸ்ட் கிளாஸ்தா, பி.ஏ. அதுக்கு ஒரு மதிப்பு இல்ல. ஒண்ணும் வாணாம், ஏசண்டு ஆறுமுகத்தின் மக பரமேசுவரி, டூசன், மட்டுமே எடுக்குறா. சின்னவ. அவ புருசன் காலேஜ் புரொபசர். புதுக்குடிக்குப் போயிட்டுவரான். பைக் வச்சிருந்தான். எட்டு லச்சமாம். காரு வாங்கியாச்சி. அவ ‘மாத்ஸ்’ பி.எஸ்ஸிதா. மாடில கொட்டாய் போட்டு, டூசன் எடுக்கிறா. மாசம் ஏழாயிரம் எட்டாயிரம் வருதாம். பொறந்தவூட்டோடதா இருக்கா. இவளுக்கு, பி.ஏ. படிப்புக்கு, பி.எட் படிப்புக்கும், அஞ்சாவது ஆறாவது கணக்குக் கூடவா சொல்லிக் குடுக்க முடியாது? நா எட்டாவதுதா படிச்சே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/71&oldid=1049517" இலிருந்து மீள்விக்கப்பட்டது