பக்கம்:உத்தரகாண்டம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    73

போயிட்டா. அவன் கையில புத்து வைக்க, வெளங்காம போக...” மோட்டார் சைகிள் பாய்ந்தோடுகிறது.

“நெதமும் நடக்குறது தா, இவளுவ, சயினும் டாலரும் தெரியும்படி எதுக்குப் போட்டுக்கணும்?”

“வாயக்கட்டி வயித்தைக் கட்டி சீட்டு நாட்டுப் போட்டு குருவி சேர்க்கிறாப்பல பணம் சேத்து நகை வாங்குறத இப்படிக் கொள்ளை கொடுக்கணும்னா வயிறு எரியாதா?...”

“பவுன் வெல ஆகாசத்துக்குப் போவுது, ரெண்டுவேள சோத்துக்கு உத்தரவாதமில்ல. எப்பிடியோ வாங்கிப் போட்டுக்கிறாளுவ...” ஆளாளுக்குப் பேசிக் கொண்டு போகிறார்கள்.

“தங்கம் தங்கம்” என்று ஒரு வெறியே எல்லோரையும் பிடித்து ஆட்டுவதாகப் படுகிறது. மோட்டார் சைகிள் காரனை எங்கோ பார்த்த நினைவு வருகிறது. ரங்கசாமி வருகிறான்."மைனாவதி ஆசுபத்திரிப் பக்கம் இவ புருசன் இளநீரு விக்கிறான். அன்னாடம் குடிச்சிட்டு வருவான். இவ தம்பிக்காரன்தான் கழட்டிட்டு ஓடிருக்கிறா...” என்று விவரம் சொல்கிறான்.

மேலே கேட்கவில்லை அவள். துடைப்பத்தைத் தட்டி விட்டு சுவர் பக்கமாகப் பின் பக்கம் செல்கிறாள். சாணம் ஒட்டியிருந்த வாளியைக் கழுவி வைக்கிறாள். கொட்டிலில் ஒரே ஒரு கிடாரிக்கன்று தான் இருக்கிறது. பதத்துக்கு வரவில்லை. இதன் தாய் சென்ற வருசம் கழிச்சல் கண்டு இறந்து போயிற்று. இப்போதெல்லாம் ஊசிக்கரு செலுத்தித் தான் கருவடையச் செய்கிறார்கள். இதன் அம்மா லட்சுமி குருட்டுக் கன்றை ஈன்றது. அது தடுக்கித் தடுக்கி விழும் போது இவள் வயிறு துடிக்கும். தாயிடம் பால் குடிக்கக் கூடவிட வேண்டும். மழை பெய்து, எதிரே, பசுமையாக இருந்தது. பசுவையும் கன்றையும் காலாற மேய விடுவதாக நினைத்து நின்று கொண்டிருந்தாள். அப்போ பார்த்து, மோட்டார் சைகிளில் சிவலிங்கம் குறுக்கே வர, கன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/75&oldid=1049528" இலிருந்து மீள்விக்கப்பட்டது