பக்கம்:உத்தரகாண்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    75

அவன் வந்த பிறகு அவனே மலசலப் பீங்கான்களைக் கொண்டு கொட்டிக் கழுவுவான். ஒருநாள் பாத்திரக் கடை நாடார் இவரை விசாரிக்க வருவது போல் வந்து, பெருத்த குரலெடுத்துக் கடிந்தார்.

“ஏலே, நீ பாட்டுக்குச் சொல்லாம கொள்ளாம வந்திட்டா என்ன அருத்தம்? கடையில ஆளில்லாம சங்கட்டமா இருக்கு...? ஸார், இவன நாங்க படிக்க வைக்கிறோம்னுதான் சொல்லிக் கூட்டி வந்தோம். இவனுக்குத் துட்டு வேணும். படிப்பு வாணாம், கடையில வேலைக்கிருக்கிறேன்னா. இப்ப... நீங்கல்லாம் என்ன நினப்பீங்க ஸார்?”

“அப்படி ஒண்ணுமில்லிங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க. வேலை செய்துக்கிட்டுப் படிக்கிறத வாணான்னு சொல்லமாட்டேன். காலம எட்டு மணிக்கு ஸ்கூல் போய் விட்டு, ஒருமணியோடு முடிந்து, பையன்கள் வேலையும் செய்யவேணும்ங்கறது என் கருத்து...” என்றார்.

“எலேய், சாயங்காலம் வூட்டுக்கு வந்திடு. அங்கேயே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம்!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

பையன் அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதான். “அம்மா, அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடாதீங்க! நான் அத்தினி பேருக்கும் சமையல் செய்து, பாத்திரம் கழுவி வீடு துடைச்சி... ரா படுக்குமுன்ன பன்னண்டாயிடும். காலம நாலுமணிக்கு எழுப்பிடுவாங்க. இவங்க பெரியாத்தா அடிக்கும். அம்மா, நா இங்கியே இருக்கிறன், அனுப்பிடாதீங்க. உங்க மகன் போல நினைச்சிக்குங்க. நான் பெத்த தாயப் பாத்ததில்ல, நீங்க தாயி...” இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தான். அய்யா இறந்த பிறகு, அவனைக் கையோடு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

நாலைந்து வருடங்கள் அவனைப் பார்க்கவில்லை.

பிறகு ஒருநாள் தேர்தல் களேவரத்தில், கூட்டம் கூட்டமாக வாக்காளரைச் சந்திக்க வந்த கரை வேட்டிக் கூட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/77&oldid=1049533" இலிருந்து மீள்விக்கப்பட்டது