பக்கம்:உத்தரகாண்டம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80   ✲   உத்தரகாண்டம்


“விடுங்கையா, அந்த முன் வாசல் தெளிச்சுப் பெருக்குறேன், அதோடு இதையும்...”

“வாணாம், விடுங்க. நீங்க தாய். நான் இங்க வெட்டியா இருக்கிறேன்.” அன்று அது போராட்டமாக இருந்தது. அவள் வென்றாள் என்றாலும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

“அம்மா, நீங்க முன் வாசல்ல அழகாகக் கோலம் போடுறீங்க. எனக்கு அந்த மாதிரி இழை, சன்ன இரட்டை இழை வர்றதில்ல... இங்க கோலம் போடுங்க...” என்று ஒத்துக் கொண்டார். அவளுக்குப் புள்ளி சுற்றும் சுழிக்கோலங்கள் நிறையத் தெரியும். ராதாம்மா முதலில் இவளிடம் கற்றுக் கொண்டு, அவளுடைய கல்வியறிவு கொண்டு அந்தக் கோலங்களில் பல்வேறு வடிவங்களும் மாதிரிகளும், புள்ளிகளின் எண்ணிக்கைகளைக் கோர்த்தும் பிரித்தும் போடுவதற்கான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தாள். குருகுலத்துப் பிரார்த்தனை மண்டபத்தில், அவை அழகுற வடிவம் பெறும். மார்கழி மாதம் வந்தால், புதிய புதிய கோலங்கள் வகுப்பறை முற்றங்களிலேயே விரியும். பஞ்சமிக்குக் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அடுத்தவளுக்குச் சுத்தமாக இதில் ஈடுபாடு இல்லை.

ஒருநாள் பஞ்சாபி நண்பர்கள் கோலத்தைப் பார்த்துவிட்டு, அவளிடம் வந்தார்கள்... “மாதாஜி, அந்தக் கோலம் போடக் கத்துக் குடுங்க?” என்றாள். “அட என்னம்மா? அந்தத் தம்பி சொன்னாரா?...”

அவள் கணவன் உடனே கொச்சைத் தமிழில் “தேவாவுக்கு ஆகாசத்தில் தான் கோலம் போடத் தெரியும், இங்க தெரியாது, பூமிலன்னேன். இவ நம்பல. பிறகுதான் கேட்டோம், நீங்க ரொம்ப நல்லா வரஞ்சிருக்கிறீங்க...” என்றான். அந்தத் தம்பி வழக்கம்போல் மீசையைக் கடித்துக் கொண்டு சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/82&oldid=1049541" இலிருந்து மீள்விக்கப்பட்டது