பக்கம்:உத்தரகாண்டம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    81


“ஆகாசத்துக் கோலம், அழிவு... நாசம். இது அழகு. சுபம். அமைதி. அதை இவங்க செய்யிறாங்க!” அது என்ன பேச்சுத் திறமை?

அதனால் குடிக்கிறாரோ என்ற குறுகுறுக்கும் உறுத்தல், நெஞ்சில் தோன்றியிருந்தது. ஒருநாள் கிணற்றடியில் ஒரு நாய்க்குட்டி வந்திருந்தது. ஒரு மாசமான தெருநாய்க்குட்டி. அதன் கழுத்திலே காயம் இருந்தது.

“அடாடா?...” என்று அதைத் தூக்கிக் கொண்டு போய் மருந்து போட்டு, வைத்தியம் செய்தார். அதற்கு நாள் தோறும் பால் ஊற்றுவார்; ரொட்டி, பிஸ்கோத்து என்று கொடுத்தார். பஞ்சாபி சிநேகிதர் குழந்தைகள் வந்து விளையாடும். பந்து போட்டால் கவ்வி வரும். அதற்கு ‘சக்தி’ என்று யெர். “சக்திமான்! டேய் சக்தி! பேப்பர்காரன் வரான், வாங்கிட்டுவா. கோலத்தை அழிக்கக்கூடாது!” என்றெல்லாம் பேசுவது காதில் விழும். பஜனையின் போது உள்ளே வந்து ஓரமாக இருக்கும். ஓம் சக்தி, சாந்தி சொல்லும் போது எழுந்து அசையாமல் நிற்கும். அதை அழைத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும், நடக்கப் போவார். பகலுணவுக்குச் செல்லும் போதும் செல்லும்.

ஒருநாள் அதிகாலையில் எப்போதும் போல் அவர் நடக்கச் சென்றிருக்கிறார். நாயும் கூடச் சென்றிருக்கிறது. அப்போதெல்லாம் கிழக்குப் பக்கம் வீடுகள் எழும்பி இருக்கவில்லை. ஏரிக்கரை வரையிலும் செல்வார் என்று நினைப்பாள். அவர் ஓடி வரும் போது அதுவும் தாவித்தாவி ஓடி வரும். இவளுக்கு இதெல்லாம் ரசிக்கும்படி இருக்கும். இவர்கள் முன்பாக சாணமிட்டுப் பெருக்கிக் கொண்டிருப்பாள். இப்போதெல்லாம் அவர் குடிசை வாசலுக்கும் அவளே நீர் தெளித்துப் பெருக்கிவிடுகிறாள்.

வீடு திரும்பும் போது கிழக்கில் ஒளி உதயமாயிருக்கும். சிறிது நேரம் இளைப்பாறுவார். நாய்க்குப் பாலும் ரொட்டியும் கொடுப்பார். அவரும் கிணற்றடியில் நீராடித் துணி தோய்த்து உலர்த்திவிட்டு, வெளியேறி கிளம்புவார்.

உ.க.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/83&oldid=1049544" இலிருந்து மீள்விக்கப்பட்டது