பக்கம்:உத்தரகாண்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82   ✲   உத்தரகாண்டம்

நாலைந்து மாதங்களில் நாய் நன்றாக வளர்ந்து, குரல் அச்சுறுத்துமளவுக்குக் குலைக்கத் தொடங்கிவிட்டது.

தெருமுனையில் யாரேனும் பழக்க மில்லாதவர் தென்பட்டாலே அதன் குரல் வித்தியாசமாகக் கேட்கும். “ம்... சக்தி... உறுமாதே!... யார் அங்கே?” என்று அவருடைய குரலும் தொடரும். அவளும் வெளியே வந்து பார்ப்பாள். அன்று அவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார்.

கடைப்பையனாக இருந்து, படிக்க வேண்டும் என்று ஒதுங்கிய பின் மீண்டும் கடைக்குச் சென்ற சிவலிங்கம் அந்த வளைவில் வந்திருந்தான். அவனுடைய உடல் வளர்த்தி, அவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் மாற்றியிருந்தது.

“சிவலிங்கமாப்பா? அடையாளமே தெரியல? எங்கே இந்தப் பக்கம்?”

“எங்க முதலாளி இவங்களப்பாக்க அனுப்பிச்சாங்க...”

நாய்விடாமல் குலைத்தது. “குலைக்காதே சக்தி. நம்ம பைய தெரிஞ்சவதா” என்று சொல்லிவிட்டு, “இன்னும் அதே கடையில் தானிருக்கிறியா?” என்றாள்.

“இல்லீங்க. இது வேற கடையிங்க...” என்றான். அதற்குள் அவர் வந்துவிட்டார். அங்கு நின்று கேட்பது நாகரிகம் இல்லை என்றுணர்ந்தவளாக வீட்டுப் பக்கம் வந்து விட்டாள்.

அன்று அவள் ஒயர்பை போட, அளவெடுத்துக் கத்திரிக்கும் போது ரங்கன் வந்தான். “புரிஞ்சிட்டிங்கல்ல? அந்தப் பயல், ஒயின் ஷாப்லதான் வேலை செய்யிறான். இவுரு மிலிட்டரி கான்டீன்லேந்து வாங்கித் தாராரு, சல்லிசு வெலக்கி...”

உண்மையில் அவளுக்குக் குத்துப்பட்ட வேதனை உண்டாயிற்று. அப்படியும் இருக்குமோ? இந்த வேதனை, அவருடைய நடத்தையில் ஒரு குத்து உறுதியானதால் ஏற்பட்டதா? அல்லது, கவடறியாத பிள்ளை, படித்து ஒழுக்கப் பாதையில் முன்னேற முடியாதபடி ‘ஒயின்’ கடைக்கு வந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/84&oldid=1049546" இலிருந்து மீள்விக்கப்பட்டது