பக்கம்:உத்தரகாண்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    83

கள்ள வாணிபம் பழகுவதால் ஏற்பட்டதா என்று வரையறுக்க முடியவில்லை. அவர் வழக்கம் போல் பஜனைக்கு வந்தார்; எல்லோரும் வந்தார்கள்; பாடினார்கள்; பழகினார்கள். ஆனாலும் கருநீலம் படிந்தாற்போல்தான் இருந்தது.

இதனால் அவள் வாசல் தெளித்துக் கோலம் போட்டு விட்ட பிறகு அதிகமாக அந்தப் பக்கம் கவனிப்பதில் ஆர்வமும் சந்தோசமும் கொள்ளவில்லை. எப்போதேனும் தட்டுப் பட்டால், உதிர்க்கும் இரண்டொரு செற்களைத் தவிரப் பேசுவதில்லை.

வைகாசிக்கடைசியில், கோடையின் வறட்சி புழுக்கமாக இரவுகளில் தூக்கம் பிடிக்காமல் வதைத்த ஒரு நாளில், விடியற்காலையில் அவள் அயர்ந்து வெளித்திண்ணையில் உறங்கியிருந்தாள். ‘ஊ’ என்று நாயின் அழுகை அவள் புலன்களை உசுப்பி எழுப்பியது. கண்களைத் திறந்து பார்க்கையில் காலை புலர்ந்தது தெரிந்தது. அவசரமாகச் சாவி எடுத்து, வாயில் கம்பிக் கதவைப் பூட்டைத் திறந்து கொண்டு போனால், நாய்தான் அழுகிறது என்று புரிந்தது.

“டேய், சக்தி ஏண்டா? ஏனழுற?...” மூங்கில் பிளாச்சுக் கதவைக் கொக்கியை அகற்றித் திறந்து கொண்டு அவள் சென்றபோது, அது அவளுக்கு முன் சென்று வீட்டுக்குள் நுழைந்தது. உயரக்கதவுதான் என்றாலும், திறந்தே இருந்தது; சாய்வு நாற்காலியில் அவர் படுத்திருந்தார். விளக்கு, மேசை விளக்கு எரிந்தது. அதுவரையிலும் அவள் உள்ளே சென்று பார்த்ததில்லை. வெள்ளையடித்த சுவரில் ஒரு மாசுமருவில்லை. மடக்கக்கூடிய கட்டிலில், படுக்கைவிரிப்பு, தலையணை கசங்கவில்லை. மடக்கு மேசையில், புத்தகங்கள் நலைந்து ஒழுங்காக மடக்குப்பலகையில் வைக்கப்பட்டிருந்தன. துணி வைத்துக் கொள்ளும் அலமாரியும் மூடியில்லாததுதான். அதன்மேல் சிறு கைப் பெட்டி; அவர் குடை அவர் தாளம் வாசிக்கும் பானை கவிழ்த்தியிருக்கிறது... பழைய பேப்பர் அடுக்கு... ரேடியோ...

“ஐயா... ஐயா?..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/85&oldid=1049547" இலிருந்து மீள்விக்கப்பட்டது