பக்கம்:உத்தரகாண்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90   ✲   உத்தரகாண்டம்

காய் என்று வாங்கி வந்து விடுகிறாள். அய்யா, அம்மா எல்லோரும் இருந்த காலத்தில், கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் பம்புசெட் - குழாய் எல்லாம் இருந்தன. மாடியில் உள்ள குளியலறைக்கும் நீர் போகும். முதன் முதலாக இந்த வீட்டில்தான் அந்தக் காலத்திலேயே பின்புறம் ‘செப்டிக் டாங்க்’ கட்டி, இது போன்ற கழிவறை கட்டினார்கள். அவளுக்குத் தெரிந்து சுமார், பத்து வருசங்கள் போல் அந்த மலக்குழி நிரம்பியதாகத் தெரியவில்லை. அதுவும் வீட்டை விட்டு அப்பால் பின் பக்கம் கொட்டில் தாண்டி, இருந்தது. அதிலிருந்து நீர் வெளியேறும் குழாயும், அது மண்ணுக்கடியில் வடியும் புதை குழியும் அமைத்திருந்தார்கள்.

ராதாம்மா இறந்து போவதற்கு முன், வீட்டில் வந்து தங்கியிருந்த கோவாலு, “தாயம்மா, செப்டிக்டாங்க் நிரம்பி மேலே ஈரம் வருது. எப்ப எடுத்தாங்க?” என்று கேட்டான். அவன் மதுரை காந்தி கிராமத்தில் இருந்து வந்திருந்தான்.

“எனக்குத் தெரியலியேய்யா? அப்பிடிக்கூட ஆகுமா?”

“ஆமா, இங்கே ஏது பாதாள சாக்கடை? அது பட்டணத்துலதானிருக்கு...”

அவளும் பார்த்தாள். கோவாலு மண்ணைத் தள்ளி, சிமிட்டிப் பலகை மூடலைக் கண்டு பிடித்தான். நிரம்பித் துளும்பி அழுக்குக் கசிந்தது...

“அய்யே! இது ரொம்ப மோசமில்ல? அன்னன்னைக்கு எடுத்திட்டுப் போறது கொடுமையின்னா, அத்தவிட இது பெரிய கொடுமையா இருக்குமே? இந்தக் குழிய, பத்துவருசக் கசடுகளை எப்படி எடுப்பாங்க?...”

அவள் கேட்கவில்லை. தோட்டம் துரவு என்று போவார்கள். மலம் அள்ளும் கொடுமையே, டவுன் நாகரிக வசதிகளை அநுபவிப்பவர் பெருகிய பிறகுதான் வந்திருக்கிறது. கோவாலுவே, அப்போதைய பஞ்சாயத்தில் சொல்லி, சாக்கடைக் கழிவு நீர் வண்டியும் ஆட்களுமாகக் கொண்டு வந்தான். இரண்டு ஆட்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/92&oldid=1049611" இலிருந்து மீள்விக்கப்பட்டது