பக்கம்:உத்தரகாண்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    91

ருந்தார்கள். ஒரு அரை டின் கிரஸினை அந்தக் குழியில் ஊற்றிக் கலக்கி, கம்பி வேலிக்கப்பால் வண்டியை நிறுத்தி ஒருவன் வாளிவாளியாக எடுத்துக் கொடுக்க, மற்றவன் வண்டியிலுள்ள பீப்பாயில் ஊற்றினான்.

“தாயம்மா, கதவசாத்திக்குங்க, நீங்க வராதீங்க?” என்று கோவாலு கத்தினாலும் அவளால் உள்ளே இருக்க முடியவில்லை. அப்போதெல்லாம் இந்தப் பக்கம் பொட்டலாக இருந்ததால் எங்கோ பள்ளத்தில் வண்டி வண்டியாகக் கொட்டிவிட்டு வந்தார்கள். சாயுங்காலம் ஐந்து மணியுடன் துப்புரவு செய்து, பழைய சாக்குக் கந்தல்களால் துடைத்து, ஏழெட்டடி ஆழமுள்ள குழிக்குள் நின்றவனைப் பார்த்து தாயம்மாளுக்கு அன்று இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. அங்கே வந்த பிறகு, குப்பை கூட்டுபவர்களையும், வாளிகளில் மலம் சுமந்து வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்லும் தொழிலாளரையும் பார்த்திருக்கிறாள். நானும் இந்த சாதி தான் என்ற உணர்வு முட்டும்.

நாகரிகம் பெருகப் பெருக, டவுன்கூட்டம் நெருங்க நெருங்க, வெளிமலக்குழிகளுடன், சமுதாயத்தின் உள் மலக்குழிகளும் பெருகிவிட்டன.

கழிவறையைத் தேய்த்துக் கழுவுகையில் அங்கு கிடந்த பீடித்துண்டுகள் அவளைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. இதற்கு முன் இங்கு புகை பிடிப்பவர்களே வந்ததில்லை என்று சொல்ல முடியாது. வெற்றிலை பாக்கு புகையிலை போடுபவர்கள், புகை குடிப்பவர்கள் எல்லாருமே வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கூடம் அவளுக்குத் தெரிந்து புனிதமானதாகவே இருந்திருக்கிறது. அந்த நிழலே அவளுக்கு மற்றவர்களிடம் ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

சொர்ணம் குரல் கொடுத்துக் கொண்டே வருகிறாள்.

“என்னம்மா, வூடு திறந்து ஜிலோன்னிருக்கு, நீங்க இங்க இருக்கீங்க?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/93&oldid=1049612" இலிருந்து மீள்விக்கப்பட்டது