பக்கம்:உத்தரகாண்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    93


“அவுரு... இல்லையா?...”

“யாரு?...”

“அதா, காரியக்காரரு... நார்த்தங்கா வோணுமான்னு கேட்டாரு. அம்மா என்ன வெலன்னு கேட்டுட்டுவரச் சொன்னாங்க. பத்து ரூபாக்கு ஆறுகான்னு மார்க்கெட்டில வச்சிருக்கா. இது புதிசா இருக்கும், வாங்கியான்னு அம்மா சொன்னாங்க. அதா கேட்டே... இங்கே எங்க நார்த்த மரம் இருக்கு?”

“அவுரு வருவாரு, அவருகிட்டயே கேளு” என்று சொல்லி அனுப்புகிறாள். சற்றைக்கெல்லாம் ரங்கன் வருகிறான்.

“ஏம்மா, அந்தப் பொம்புள இங்கேருந்தா தண்ணி எடுத்திட்டுப் போவுது?”

“ஆமா, புதுசா வந்திருக்கிற காலனில ஒரு வீட்ல வேலை செய்யிறா. குடிக்கத் தண்ணி இல்ல, ஒரு குடம் எடுத்திட்டுப் போறேன்னா...”

“அப்படீன்னா, விட்டுடறதா?...” விழிகள் உருள அவன் குரலின் ஏற்றம் ஒரு எசமானனுக்குரிய தோரணை காட்டுகிறது.

“ஏம்ப்பா, இந்த வீட்டு நிழல்ல ஒதுங்கி, கேணி நிறைய ஆண்டவனருளால நல்ல தண்ணி இருக்கறப்ப தாகத்துக்குக் குடிக்கப் பிச்சை கேட்டாப்பல வரவங்ககிட்ட இல்லேன்னு சொல்லச் சொல்லுறியா? அது என்னால முடியாது.”

“அந்தப் பொம்புள அதைப் பாக்கெட் போட்டுவிக்குது, பெரிய பஸ் ஸ்டாப்புல. ஒரு குடத்துக்கு இருநூறு முந்நூறு சம்பாதிக்கும்?”

இவளுக்குப் புரிகிறது. திரும்பிப் பார்த்துக் கொண்டு “நீயும் வாணா, எடுத்து வித்துக்க. நான் தடையா இருக்கல.”

அவன் எதுவும் பேசவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/95&oldid=1049615" இலிருந்து மீள்விக்கப்பட்டது