பக்கம்:உத்தரகாண்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8

வள் மனம் அமைதியிழக்கிறது. இந்த வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டு இவள் எதற்காக இருக்க வேண்டும்?... ஆனால் எங்கே போவது? நிழலிலேயே இருந்து பழகிவிட்டால் என்ன? சொந்த நிழல் என்றோ, சொந்தமில்லாத நிழல் என்றோ ஒன்று கிடையாது. எல்லாம் மனசைப் பொறுத்தது. அவள் ‘மகன்’ அன்று வந்து கெஞ்சினான். போகப் பிடிக்கவில்லை. ஏன்? ஏன்?

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது.

காந்தி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன போதுகூட அந்த வீட்டில் அப்படி ஒரு துயரம் வந்து கவ்வவில்லை. ஊர் உலகமே அழுதது. ரகுபதிராகவ ராஜாராம், ஈசுவர அல்லா தேரே நாம் என்று, ஆங்காங்கு பிரார்த்தனைக் கூட்டம் கூடினார்கள். உண்ணாவிரதம் இருந்து துக்கம் காத்தார்கள். ஆனால் துக்கம் என்பது, அப்படிப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இல்லாமல், குறிபார்த்துச் சேதப்படுத்தும் அம்பாக, இம்சையாக வந்து விடிந்தது.

சுதந்தரம் வந்த பிறகு, எஸ்.கே.ஆர். தேர்தலில் நிற்க வேண்டும் என்று, கட்சித் தலைவர்கள் பலரும் அவரைக் குருகுலம் வீட்டில் வந்து பார்த்தார்கள்; வற்புறுத்தினார்கள். அவருக்குத் தொகுதி ஒதுக்கினார்கள்.

“பதவி இல்லாத மக்கள் சேவையே இதுவரையிலும் நான் செய்தது. இனியும் எனக்குப் பதவி வேண்டாம்...” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். அவள் புருசனுக்குத்தான் மிகுந்த ஏமாற்றம்.

“என்ன ஆளு இவுரு? நேரு ஐயா தூதனுப்பிக்கூட வானாம்ன்னு சொல்றாரு?” என்று முண முனுப்பான்.” “பொழுதுக்கும் இந்தத் தோட்ட வேலை எடுபிடி வேலைன்னு பவுசில்லாம கிடக்கிறதுக்கு, நம்ம ஊரு நாட்டுல போயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/96&oldid=1049616" இலிருந்து மீள்விக்கப்பட்டது