பக்கம்:உத்திராயணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தராயணம் 7



போலும் அந்த உருவிலேயே புரண்டு புரண்டு முள்வேலியில் ஒரு சந்தின் வழி வெளியேறி. அப்பாடா! எப்படியோ ஒன்றினின்று ஒன்று விடுபட்டு உருவம் பிளந்து, தொப்பைப் பாட்டிகள்போல் லொங்கு லொங்கென்று ஒடுகின்றன.

பின்னால் ஒரு குடிசையில் ஒரு ஸாஹிபா வளர்க்கிறாள். ஆனால் அவற்றிற்கு வேட்டைக்காடு இங்கேதான். மல்லிச் செடியை மிதித்துக்கொண்டு, கொத்தமல்லி விதையைக் கொத்திக்கொண்டு, கறிவேப்பிலைக் கன்றை வேரோடு சாய்த்து-ஹரிணி வாய்விட்டு அழுதேவிட்டாள்-கண்ட சேற்றை மிதித்துக்கொண்டு ஏமாந்தால் சமையலறைவரை நீளும் கால்கள்.

Tommy தென்னங்கன்றடியில் அதுவே பறித்துக்கொண்ட குழியில் படுத்திருக்கிறது. வெய்யில் தாங்காது வயிறு, கொல்லன் துருத்திபோல் குபுக் குபுக். என்றைக்கு ஒருநாள் மண்டை கலங்கி வெடுக்கென்று பிடுங்கப்போகிறதோ? இப் போது அதற்குக் கோழிகளைத் துரத்தக்கூடத் தெம்பு இல்லை. எனக்குத் தெரிந்தவரை இது குரைக்கிற நாயுமல்ல, கடிக்கிற நாயுமில்லை. நாய்களில் ஊமை உண்டோ? அப்போ இதன் பிறவிப் பயன்தான் என்ன? ஒரு காரியமு மில்லாமல் கனகாரியமாக குடுகுடுவென்று ஓடுவதும்...ஒடுவதும்.ஒடுவதும்... அவ்வளவுதானா?

அலமாரியிலிருந்து கைக்குத் தட்டுப்பட்ட புத்தகத்தை இழுத்துப் புரட்டுகிறேன் மத்வாசாரியரின் 'சங்கர திக் விஜயம்' வயதுக்கேற்ற புத்தகம்தான். ஆனால் இந்த வேளைக்கு மண்டையில் ஏறுமா? ஏதாவது ஜேம்ஸ் பாண்ட் வரும் என்று நினைத்தது போக தோல்வி காணாத பாண்ட் அடி, வெட்டு. குத்து சுடு, 007 சட்ட பயமில்லாமல் யாரை வேணுமானாலும் கொல்லலாம், சூப்பர்மேன் பாண்ட்.

மண்டை இடிக்கிறது. பெருமாள் எப்பவோ வந்து தயாராக வைத்திருந்த ஏனத்தில் பாலை ஊற்றிவிட்டுப் போய்விட்டான். ஹரிணி தயவு பண்ணனும், ஆனால் அவள் அயர்ந்து தூங்குகிறாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/17&oldid=1155185" இலிருந்து மீள்விக்கப்பட்டது