பக்கம்:உத்திராயணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 லா.ச.ராமாமிருதம்



பிற்பகல் வாடைக்காற்று கிளம்பிவிட்டது. வாசலுக்கு வெளியே புல் தரையில் சாய்வு நாற்காலியைக் கொணர்ந்து போட்டுக்கொள்கிறேன். வானத்துக்கும் வெய்யிலுக்கும் காற்றின் மத்யஸ்தம் நடந்துகொண்டிருக்கிறது. வெறிச்சிட்டுக் கிடந்த வான வீதியில் போக்குவரத்து தொடங்கி விட்டது. மேகங்களின் பவனி, பட்சி ஜாலங்களின் விதவிதமான வரிசைக் கட்டுக்கள், ஆட்டத்தில் கையிலிருந்து துள்ளிக் கம்பளத்தில் விழும் சீட்டில் காண்பதுபோல பட்சிக் கூட்டங்கள் மேகத்தின் பின்னணியில் விதவிதமான பொட்டு கள் வைக்கின்றன. மேற்கு, மணக்கோலம் பூணுகிறது. பெண்ணுக்கு எந்தப் புடவையும் பிடிக்கவில்லை. அவிழ்த்துப் போட்ட புடவைகள், விதவிதமாய் போர் போராய்க் குவிகின்றன. ஜரிகைகள், கலர்கள், மோஸ்தர்கள் மிளிர்கின்றன.

வானத்தின் கவானில் லேசாய் ஒரு தேமல் படர்ந்திருக்கிறது.

கிணற்றடியிலிருந்து, வாய் குழறியபடி எங்கேயோ சுட்டிக் காட்டிக் கொண்டு ஹரிணி ஓடி வருகிறாள். பதறிப் போய்ப் பார்க்கிறேன். தோய்க்கிற கல்லின்கீழ் விட்டிருக்கும் சந்தில் பாம்பு சட்டை.

ஹரிணி குதிக்கிறாள். துள்ளுகிறாள், துடிக்கிறாள், முற்றுப்புள்ளி யில்லாமல் கத்துகிறாள்.“அத்வானம் பிடிச்ச இந்த இடத்தில் வீட்டை வாங்கிப் போட்டுட்டு, ஒரு நாளைப் பார்த்தாப்போல் நான் வயத்தில் நெருப்பைக் கட்டிண்டு. ஐயையோ என்னால் இனிமேல் முடியாது. உங்கள் வீட்டை நீங்கள் காவல் காத்துண்டு கிடங்கோ, எங்களை எங்காணும் மயிலாப்பூரில் குடி வெச்சுடுங்கோ” - மூச்சு விடாமல் வார்த்தைகளின் கோவை கூட சரியாகப் புரியாமல் இன்னும் ஏதேதோ குளறுபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/18&oldid=1149024" இலிருந்து மீள்விக்கப்பட்டது