பக்கம்:உத்திராயணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தராயணம் 9



“ஆமாம் அதென்ன மயிலாப்பூர் கணக்கு? மாம்பலம், சைதாப்பேட்டை, வடபழனி, சாலிக்ராமம், நங்க நல்லூர், வேளச்சேரி-பேர்களுக்கா குறைச்சல்? இடம்தான் ஊசி முனைக்குக்கூட வழியில்லை.”

“நான்தான் லப லப லபன்னு அடிச்சுக்கிறேன். ஆனால் அழுத்தமா உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு பதில்தானே! மெளனம் ஸர்வார்த்த ஸாதகம்-”

தைரியத்துக்கு அவள் முதுகில் ஒரு 'ஷொட்டு' கொடுக்கிறேன். அவளுக்கு முகக்கடுப்பு இதற்குமேல் சாத்தியமா? என் கையை உதறுகிறாள்.

“காடு வாவா என்கிறது. என்ன வேண்டிக் கிடக்கு?” ஹரிணிக்கு என்றைக்குமே ஒரு வழிப்பாதைதான் வீட்டுக்கு வந்த புதிதில், அந்த முகக்கடுப்பே அவளுக்கு ஒரு களை கொடுத்தது. அவள் வீட்டில் ஆறு அண்ணன் தம்பிகளுக்கிடையில் அவள் ஒரே பெண், உடன்பிறந்தான்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தச் செல்லம் அவளுக்கு இன்னமும் செல்கிறது. அந்தக் கோபத்தின் அழகே என் நெஞ்சை எத்தனை முறை அள்ளியிருக்கிறது! ஆனால் இப்பவோ-

தோளை வியர்த்தத்தில் தூக்குவதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. வெய்யிலடித்தால், மழை பெய்தால், பாம்பு சட்டை யுரித்தால், அசல் வீட்டுக்கோழி இங்கு மேய்ந்தால், Tommy-க்கு என்றேனும் பைத்தியம் பிடித்தால் சைக்கிளைப் போட்டுக்கொண்டு கறிவேப்பிலைக் கொத்துக்குக் காய்கறிக் கடைக்குப் போனால் அங்கு கடைக்காரன் கைவிரித்தால், வழியில் சைக்கிள் பங்க்ச்சர் ஆனால், வேலைக்காரி ஒரு வேளைக்கு வராவிட்டால், சினிமாவுக்குக் கிளம்பிப் போய்ச் சேருவதற்குமுன் படம் ஆரம்பித்து விட்டால், தையல் மெஷின் ரிப்பேர் ஆனால், திடீரென்று மின்சாரம் தோற்றுவிட்டால், எல்லாமே என் குற்றம்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/19&oldid=1149025" இலிருந்து மீள்விக்கப்பட்டது