பக்கம்:உத்திராயணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 லா. ச. ராமாமிருதம்



ஹரிணி, கொண்டையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே “”மோருஞ் சாதம் கரைச்சு பழையது மூலையில் வெச்சிருக்கேன். வீடு ஜாக்கிரதை!”

இப்போ வீட்டில் நான் மட்டும்தான். அரணை ஒன்று காலில் உராய்ந்து விழுந்தடித்துக்கொண்டு ஒடுகிறது. ஒன்று திடீரெனப் புலனாகிறது. மனிதனைத் தவிர மற்றெந்தப் பிராணியும் எப்பவும் ஏதோ ஒரு ஜோலியில் ஈடுபட்டுத்தானிருக்கிறது. பொழுது போகவில்லையே எனும் நிலை அதற்கில்லை, காலப்ராமாணத்தில் மிகச் சிறிய அளவைக் கூட அதன் முழுமைக்கு வாழ்வதனால், அதற்குப் பொழுது போதவில்லை. மனிதன்தான், மோவாயைக் கைக்கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு, காலைக் கால் மேல் மடித்துப் போட்டுக்கொண்டு, அல்லது, ஒடுக்கிக் கொண்டு Rodin அப்படியே ஒரு சிலை வடித்து, அதையே காயமான நியாயமாகச் சாதித்துக்கொண்டு...

நான் இப்போது உணர்வது என் தனிமையையா! வெறுமையையா!

வானத்துத் தேமல் நிலவாகப் பூத்துவிட்டது. ஆனால் என் கண்ணில் சதையால், பார்வையின் சிதையில், எட்டாய் விண்டு தெரிகிறது. பூசணி பத்தைகள்.

முள்வேலியில் காட்டாமணிச் செடி, இடையிடையே பூவரசு, நுணா, ஒதிகை மரங்கள் நெருக்கமாக இலை பின்னிக்கொண்டு, நான் ஒரு குஞ்சுபோல், ராக்ஷஸக் கூட்டில் காத்திருக்கிறேன். எதற்கு?

கொஞ்சநேரம் மொட்டைமாடியில் காற்று வாங்கலாமா!

என் கனத்தடியில் ஏணி படிக்குப்படி முனகுகிறது.

மாடியில் உடம்பை நீட்டுகிறேன் ஆ! இஸ் திஸ் பியூட்டிபுல்!

தோள்மேல் சுதந்திரமாய்ப் போட்ட கைபோல், தண்டவாளம் எட்ட தொடுவானை அணைத்து ஓடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/24&oldid=1149949" இலிருந்து மீள்விக்கப்பட்டது