பக்கம்:உத்திராயணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 லா.ச.ராமாமிருதம்



சரி, என்ன செய்யப்போகிறாய்! அத்தனை நட்சத்திரங்களையும் வாரிக் கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பீச்சில் சுண்டல் விற்கப் போகிறாயா! அல்லது நட்சத்திரப் பூக்கள் தொடுக்கப்போகிறாயா!

இந்த எண்ணத்தின் மிதப்பே அரை மயக்கம். கால் தூக்கம். கால் நினைவில் எல்லாம் ஒன்று குழம்பி விழித்துக் கொண்டிருந்தேனா! மயங்கிக்கிடந்தேனோ: தூங்கியே போய்விட்டேனோ?-திடீரென Brindavan Express இன் அறை கூவலில்தான் நினைவின் இயக்கம், தடுத்த நீர்வீழ்ச்சி போல் தடதடவென என்மேல் இறங்கிற்று.

புகைப்போக்கியின் வழி சமையலறையில் ஏதோ பண்டம் உருளும் சப்தம்.

ஒரு மஞ்சள் பூனையின் நடமாட்டம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

ஏணிப்படியில் கால் வைத்ததும்-

ஏணிதான் தரையில் சரியாகப் பதிந்தில்லையோ,

ஏற்கெனவே நைந்து, கட்டு முறிந்ததோ,

இசைகேடாய், தூக்கக் கலக்கத்தில் நான்தான் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டேனோ?-

ஏணி நிலை பிசகி, ஏணியோடு, சேகர் வெட்டிச் சுவரோரமாய்ப் பரப்பி வைத்திருக்கும் முள் படுக்கையில் சுமார் இருபது அடி உயரத்தி லிருந்து-

முட்கள் வாழைப்பழத்தில் குத்துவதுபோல் முதுகில், பின் மண்டையில், சப்பையில் நுழைகையில் என்னையறியாமல் வீறலில் வாய் திறந்தது. ஆனால் சத்தம் வரவில்லை,ஒருக்களிக்க முயன் றேன் . முடியவில்லை. இடது பக்கம் மறுத்துவிட்டது. Oh my God வாய் பொத்திய, நிசப்தம், பயத்தில் இலைகூட அசையவில்லை. எனக்கு, என்ன நேர்ந்துவிட்டது? No, No, No.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/26&oldid=1155192" இலிருந்து மீள்விக்கப்பட்டது