பக்கம்:உத்திராயணம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 லா. ச. ராமாமிருதம்


குருக்கள், மடியிலிருந்து காயிதப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து, தாம்பூலத்தை உரலில் போட்டு இடிக்க ஆரம்பித்தார். அவருக்கு இடித்துத் தருவதற்காக, இரண்டையும் அவர் கைகளிலிருந்து கழற்ற முயன்றேன்.

“வேணாம்; வேணாம்! உனக்கு இந்தப் பக்குவம் தெரிய நியாய மில்லே. நீங்கள்ளாம் உத்தியோக ரீதியிலேயே அக்னி ஹோத்ரம் பண்ணறவாள்!”

நான் மருந்துக்குக்கூடப் புகை பிடிப்பதில்லை, அது எப்படியிருக்கு மென்று கூட எனக்குத் தெரியாது. அது அவருக்கும் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்படியெல்லாம் இடிப்பது குற்றமாக குருக்களுக்குப் படவில்லை. ஆனால் நானும் மறுக்கவில்லை. பெரியவர்களின் அற்ப சந்தோஷத்தைக் கெடுப்பானேன்! என் பிள்ளை களையும், நானும் இதேபோல், என் கொடுமையை அனுபவிப்பதற்காக கொட்டிக் கொட்டி,அந்தக் கற்கண்டு குயில்களைக் கடுவாம்பூனை களாக்கி, பிறகு பதிலுக்கு ஒரு முறையேனும், அவர்கள் திருப்பிக் கடித்தால்,வலி பொறுக்காமல் சகட்டுக்கு இளைய தலைமுறையையே சபிக்கிறேனோ என்னவோ?

“யாரு, கூனப்ப முதலியாரா? வாங்க!” வந்த ஆள் ஆறடி இரண்டங் குலம். ஆஜானுபாகு, அப்பளக்குடுமி. குருக்கள் வழங்கிய விபூதியைப் பக்தியாய் வாங்கி நெற்றியில் உடம்பில் பூசிக்கொண்டான். அப்படியே நான் யார், அவ்விடத்தில் எனக்கென்ன ஜோலி என்று கண்ணால் வினாவினான்.

“இவர் யாரு தெரியுதா? தெரியல்லே? எட்மாஸ்டர் பிள்ளை சப்தரிஷி ஐயர் குமாரன்.” அப்போ பள்ளிக் கூடத்தில் ஆறாவது வரைதான்! இப்போத்தான் பத்துக்கும் மேலே போவுதே! இப்போ எட்மாஸ்டர், இவர் நினைப்பிருக்கணும். எனக்கிருந்து என்ன பிரயோசனம்?