பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

   இளவேனில் ஒளிமாயமே
   இன்பப்புயல் வெளிமீலே.
   விளையாடும் திரு நாளிலே
   விழைவோ டென் மனமோகினி.
   உளம் நாடும் கவி பாடுவேன்
   உதட்டோரம் மது வோடவே.
   இளந் தெய்வ அருள் யாதுதான்
   என்னின்ப உலகாகுமே!

அன்புக்குரிய யாஸ்மியைப் பற்றி அவன் இதயத்தின் அடித்தளத்திலேயிருந்து கிளம்பிய இந்தப் பாடலை அவள் படித்தால் எத்தனை மகிழ்ச்சியடைவாள்! அவளைப் பற்றியே அவளுக்காகவே பாடப்பட்ட இந்தக் கவிதை சாதாரணமானதுதான்.

காதலைப்பற்றிய அழகு வருணனை யாதும் அவன் எழுதிவிடவில்லை. அவனுடைய எண்ணத்தில் எழுந்த கருத்தைத்தான் நான்கு அடிகளாக எழுதி வைத்திருந்தான். இருந்தாலும் யாஸ்மிக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும், அடுத்த நாள்வரும்போது அவளிடம் காண்பிக்க வேண்டுமென்று இருந்தான்.

ஆனால், யாஸ்மி, அடுத்த நாளும் வரவில்லை; அதற்கடுத்த நாளும் வரவில்லை!


16. எங்கு போனாளே என்னுயிர்க் காதலி!

தொடர்ந்து யாஸ்மி வராமல் போகவும் பித்துப் பிடித்தவன் போலானான் உமார். நீருற்றுக்குப் பக்கத்திலே போய் நெடுநேரம் காத்திருப்பான். அவள் தண்ணிர் எடுக்க வருவதேயில்லை. தொழுகை நேரத்திலே மசூதிப்பக்கம் போய், வாசலின் உட்புறத்து ஓரத்திலே நின்று கொண்டு, பெண்கள் போகும் திசையிலே ஆராய்ந்து கொண்டிருப்பான். ஒன்றும் பயன்படவில்லை.