பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

காரியமே! இத்தனை விஷயங்களையும் எண்ணித் தெளிந்து கொண்ட டுண்டுஷ், அவள் விஷயத்தில் தான் தலையிடக் கூடாதென்ற முடிவுடன் ஆதரவான, இரக்கத்துடன் கூடிய தொனியில், ஆறுதல் கூறத் தொடங்கினான்.

“ஆ! அப்படியா நேர்ந்துவிட்டது. எனக்கு மட்டும், கொஞ்ச நாட்கள் முன்பாகவே இந்த விஷயம் தெரிந்திருந்தால், உனக்கே திருமணம் செய்து முடித்து விட்டிருப்பேன். சாட்சிகள் எதிரில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் திருமணத்தால், உன்னுடைய காதலி இரும்புச் சங்கிலியில் கட்டப்பட்டவள் போல் ஆகிவிட்டாள். இனி யாரால் என்ன செய்யமுடியும் ஏதாவது செய்யமுடியுமா? என்று யோசித்துப் பார்க்கலாம்!” என்றான் டுண்டுஷ்.

“ஆனால், அவள் எங்கேயிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களால் முடியாத காரியமல்ல, அடுத்த மாதத்தில் நான் அவளைப் பெண் கேட்பதாக இருந்தேன்.”

“உம் விதி அப்படி! அதை யாரால் மாற்ற முடியும்!”

“எங்கேயிருக்கிறாள் என்று மட்டும் கண்டு சொல்லுங்கள். நான் அவளைப்பார்க்க வேண்டும்.”

“அது சரி, உடனே இன்று இரவே அங்காடிக் கட்டிடங்களுக்கு என்ஆட்களை அனுப்புகிறேன். நாளைப் பொழுதுக்குள் அவர்கள் அவள் இருப்பிடத்தைக் கண்டுவந்து சொல்லி விடுவார்கள். அதுவரையில் நீ என்கூடவே இரு” என்றான் டுண்டுஷ்.

அடுத்த நாட்காலையில் டுண்டுஷ் அனுப்பிய ஆட்கள் திரும்பி வந்தார்கள். துணி வியாபாரி அப்துல்சைத் என்பவன் நிசாப்பூரில் தற்பொழுது இல்லை என்றும், தன்னுடைய புது மனைவியையும் வேலைக்காரர்களையும் அழைத்துக் கொண்டு நகரைவிட்டு வெளியேறி விட்டானென்றும் ஆனால், எந்த ஊருக்கு எந்தத்திசையில் போனானென்பது தெரிந்து கொள்ள முடியவில்லையென்றும் கூறினார்கள். தினந்தினம் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நகரில் இருந்து வெளியூர் செல்லும்