பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

பாதைகளும் எத்தனையோ இருக்கின்றன. அதனால், அந்த ஒரு வியாபாரி வெளியேறிய விவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர்கள் கூறினார்கள். இருப்பினும் ஒவ்வொரு பாதையையும் கவனித்துத் தகவல் தெரிவிப்பதாக உறுதி கூறினார்கள் அவர்கள் கூறிய விதத்திலிருந்து, அந்த வியாபாரி திரும்பவும் எப்பொழுதாவது வியாபார நிமித்தம் நிசாப்பூர் வரநேரிடக் கூடுமென்றும் அப்பொழுது கண்டுபிடித்து விடலாமென்றும் தோன்றியது!

இந்த விவரங்களால் உமார் மனஅமைதி பெற்று விடுவானென்று டுன்டுஷ் எண்ணியிருந்தான். ஆனால், அவன் எண்ணியது தவறாகிவிட்டது. உமார் தன்னுடைய பழைய பழுப்பு நிறமேலாடையுடன் அங்காடிப் பக்கமாகப் போனான். அங்கேயுள்ள பல கட்டடங்களிலும் உள்ள வியாபாரிகளுடனும், ஒட்டகக்காரர்களுடனும் பேசிக் கொண்டிருந்தான். பிறகு ஆளே நகரத்தை விட்டு மறைந்துவிட்டான். டுன்டுவினுடைய வல்லமையும் திறமையும்மிக்க ஒற்றர்களால் உமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல்நாள் அப்துல்சையித் என்ற வியாபாரியைத் தேடியதைக் காட்டிலும் அதிக அக்கறையோடு உமாரைத் தேடினார்கள். பயன்தான் ஏற்படவில்லை.

உமார் ஒட்டகக்காரர்களுடன் கிளம்பிப்போய் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான். நல்ல தூக்கம் வந்து கண்ணைச் சுழற்றும் அதிகாலை வேளையிலே எழுந்திருப்பதும், ஒட்டகக்காரர்கள் தங்கும் கூடாரங்களிலும், வியாபாரிகள் தங்கும் சத்திரங்களிலும் நுழைந்து நுழைந்து வெளிவருவதும், கண்ணெதிரில் தோன்றிய மனிதர்களையெல்லாம். மீஷிட் நகரைச்சேர்ந்த அப்துல்சைத் என்ற துணிவியாபாரியைச் சந்தித்ததுண்டா என்று விசாரிப்பதும் இப்படியாக ஒரே வெறியாக ஊர் ஊராகப் பாலைவனம் பாலைவனமாக எங்கும் தேடிக் கொண்டிருந்தான். சந்தையிரைச்சலின் ஊடேயும், புழுதிபடிந்த பாதைகளிலும், தன்னுடைய கேள்விகளைத் துணையாகக் கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

காய்ச்சலால் உடல் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்திலும், உள்ளத்தின் காய்ச்சல் அதிகமாக உந்தித்தள்ள மீஷித் நகரத்தின் தங்கும் விடுதிகளையும், யாத்திரிகர்கள்கூடும் புண்ணியத் தலங்களையும் தேடிச் சென்றான். செப்ஸிவார் நகரில் உள்ள