பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


ஒரு நாள் யாஸ்மி தன்னுடைய ஆசைப் பூனைக்குட்டியைத் தேடிக் கொண்டு திரிந்தாள். அது அவளுக்குத் தெரியாமல் எங்கே ஊர்வலம் போனதோ? வெளியிலே வந்து பார்த்தபொழுது, ஐந்தாறு பையன்கள் ஒரு மரத்தின் மீது கல்லெறிந்து கொண்டிருந்தார்கள். அந்த மரக்கிளையொன்றில் பயந்து நடுங்கி பதுங்கிக் கொண்டிருந்தது, அந்த சாம்பல் வண்ணப் பூனைக்குட்டி. “எரியாதீர்கள்! எரியாதீர்கள்!” என்றுக் கத்திக்கொண்டே ஓடி வந்தாள் யாஸ்மி. ஆனால் அந்தச் சுட்டிப் பயல்கள் பூனையைக் கொல்லும் வரை நிறுத்தமாட்டார்கள் போலிருந்தது. யாஸ்மி விறுவிறுவென்று மரத்தின் மேல் ஏறினாள். அவள் பூனைக்குட்டியைப் பிடித்துத், தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள். அதன் பிறகுதான் கல்லெறி நின்றது. அந்தப் போக்கிரிகளும் ஓடி விட்டார்கள். பூனைக்குட்டியை அணைத்தபடி யாஸ்மி மெதுவாக ஒவ்வொரு கிளையாக மாறி ஆகக் கீழேயிருந்த கிளைக்கு வந்து சேர்ந்தாள். பூனைக் குட்டியையும், வைத்துக் கொண்டு இறங்குவது முடியாத காரியம். குதிக்கலாமென்றாலோ, அந்தக் கிளை மிக உயரமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் யாஸ்மி திருதிருவென விழித்தாள். வீதியில் போகும் யாரும் அவளைக் கவனிக்கவேயில்லை. சிறிது நேரத்தில் கீழேயிருந்து “குதி!” என்ற ஒரு குரல் கேட்டது. ஒரு பையன் இரு கைகளையும் நீட்டிக் கொண்டு மேலே பார்த்து அவளைக் குதிக்கச் சொன்னான். அவன் யாரென்று பார்த்தாள். அவன் ரஹீம் கூட வருவானே, இப்ராஹீம் மகன் அவனேதான்! அவன் கையில் குதிக்க அவள் விரும்பவில்லை. “முடியாது” என்று சொல்லித் தலையை ஆட்டி விட்டாள்.

இப்ரஹீமின் பையன் விறுவிறுவென்று மரத்தின் மேல் ஏறினான். அவள் பக்கத்திலே வந்தான். அவளை ஒரு கையில் இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு, மறு கையால் மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு கால்களைத் தளர்த்திக் கீழே தொங்கினான். யாஸ்மியின் நெஞ்சு துடித்தது. அவளுடைய பூனைக்குட்டி கால்களை நீட்டிப் பாதத்தில் புதைந்திருக்கும் நகங்களை வெளிப்படுத்தி அவன் தலைப் பாகையைப் பற்றிக் கொண்டது. அப்படியே தரையில் குதித்தான். யாஸ்மியின் முகம் அவனுடைய தலையில் இடித்தது. கரிய கண்களிரண்டும் விரிய அந்தக் குறும்புக்காரன் அவளைப் பார்த்துப் புன்னகை