பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

“மயிரிழையளவு காலத்தையும்” டுன்டுவின் வாய் முணுமுணுத்தது. அவனால் இதை நம்ப முடியவில்லை. அருகில் நின்ற குவஜா மைமன் பக்கம் திரும்பி நோக்கினான். அவன் இதை நம்புகிறானா என்ற கேள்வி அவன் கண்களிலே தோன்றியது. இவன் கருத்தைப் புரிந்துகொண்ட அந்தக் கணிதப் பேராசிரியன், மைமன் “அவர் குழப்பத்துடன்தான் பேசுகிறாரோ என்னவோ, அது தெரியவில்லை. ஆனால், அவர் கணிதங்களைச் செய்வதிலே மூடரல்ல. அவர் விளக்குகிறபடியான கால அளவுத் தூண் நிச்சயமாகச் சரியானதாகவேயிருக்கும். சரியான முறையில் அவர் கூறுகிறபடி தூண் அமைக்கப்பட்டால் அறிஞர் அலி சென்னாவின் பூகோள உருண்டை எவ்வளவு சரியானதோ, அவ்வளவு சரியாக அந்தத் தூணும் இருக்கும். இதில் ஐயமில்லை!” என்றான். எந்த முடிவுக்கும் வரத் தோன்றாது அவ்விடத்தைவிட்டு அகன்றான் டுன்டுஷ்.

டுன்டுஷ் கூறிய இந்தக் குழப்பமான கதையை நிசாம், வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். உமாரை வைத்துக்கொண்டு செய்வதற்கிருந்த அவருடைய திட்டங்களெல்லாம்கூட அவன் மறைவினால் தவிடு பொடியாகியிருந்தன. அந்தக் கோபத்துடன் குவாஜா மைமன் வேறு, உமாரின் இந்தப் புதிய பஞ்சாங்க முறையை ஒப்புக்கொள்கிறான் என்பதும் சிந்திக்கவேண்டிய விஷயமாக இருந்தது.

“புதுப் பஞ்சாங்கமா? அது நம் பழக்க வழக்கத்திற்கு மாறுபட்டதாயிற்றே! மதத் தலைவர்களின் உலோமா சபை எதிர்க்குமே! - கிறிஸ்துவர்களுக்கு எனத் தனியே ஒரு பஞ்சாங்கம் இருக்கிறது! காத்தாணியர்களுக்கு வட்டப் பஞ்சாங்கம் இருக்கிறது. பாரசீகர்களாகிய நமக்கு, இஸ்லாமிய ஆட்சிக்கு முன்னிருந்தே இந்தப் பஞ்சாங்க முறையிருந்து வருகிறது இதில் மாறுதல் செய்வதென்பது ஆபத்தாயிற்றே!”

நிசாமின் இந்த ஆராய்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த டுன்டுஷ் கண்களை முடிப் பெருமூச்சு விட்டபடியே “உமார் காலம் ஒன்றே ஒன்றுதான் என்று கூறுகிறான். நாட்டின் காவலராகிய தாங்களோ, நான்கு காலங்களைப் பற்றிக் கூறுகிறீர்கள் எனக்கு மூளை குழம்புகிறது.”