பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

ஆராய்ச்சிக் கூடத்தில் வேலைகள் சுறுசுறுப்பாய் நடப்பதைக் கண்டு நிசாம் அல்முல்க் மிக மகிழ்ச்சியடைந்தார். கோடைக்காலம் முடியும் தருவாயில் நீர்க்கடிகாரமும் பளிங்குக்கல் தூணும் அமைக்கப் பெற்றுவிட்டன. நீர்க் கடிகாரத்தில், மணிக்கு அறுபது முறை சுற்றுகிற ஒரு சிறு சக்கரம் அமைக்கப் பெற்றிருந்தது. மணிக்கு ஒரு முறை அசைகின்ற ஒரு பெரிய சக்கரமும் அதில் பொருத்தப் பெற்றிருந்தது. ஈட்டி முனை போன்ற ஒரு வெள்ளி முனை அளவு படுத்தப்பட்ட ஒரு கோட்டின் மீது ஒவ்வொரு மத்தியானத்திற்கு ஒரு முறை நகர்ந்து சென்றது. ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப அந்தக் கோட்டின் மீது நகர்ந்து கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்த டுன்டுஷ் எவ்வளவு சரியாக எவ்வளவு போற்றத்தக்கதாக இருக்கிறது என்று வியப்படைந்தான். ஆனால், கணிதப் பேராசிரியன் மைமன், ஓர் ஆண்டின் முடிவில்தான் உண்மை நேரத்திற்கும், இதற்கும் உள்ள வேற்றுமை தெளிவுபடும் என்று விளக்கினான். கோட்டையில் நாளைக் கணக்கிடுவதற்கு, வேல்பிடித்தவீரன் ஒருவன் இருப்பதுபோல், இங்கேயும் ஒருவன் இல்லாததுதான் பெருங்குறையென்று டுன்டுஷ் கருதினான். அவனுடைய அறியாமைக்காகப் பேராசிரியன் மைமன் இரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தான்.

எல்லாம் ஆயத்தமான பிறகு, ஆராய்ச்சியாளர் நால்வர் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். தங்கள் வேலையைத் தொடங்குவதற்கு எல்லோரும் ஆயத்தமாகினர். ஏழெட்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகே இதன் முடிவு தெரியும் என்று மைமன் கருதினான். நான்கைந்து ஆண்டுகள் போதுமென்று உமார் கூறினான்.

“அடேயப்பா! நாலைந்து வாரத்தில் ஒரு பெரிய அரண்மனையே கட்டிவிடலாமே! இந்த வேலைக்கு வருடக் கணக்கில் ஆகுமா? என்ன பயன்?” என்றான் டுன்டுஷ்.

“உன்னுடைய அரண்மனை காலப்போக்கில் மண்ணோடு மண்ணாகப் போய்விடும். என்னுடைய பஞ்சாங்கம் என்றென்றும் பயன்படும். போபோ!” என்று உறுமினான் உமார்.

சூரியனுக்கு நேராய் பூமி இருக்கக்கூடிய முன்பனிக்காலத்தில் ஒரு நாள் தங்கள் வேலையைத் தொடங்க