பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

ஆறு வான நூல் ஆராய்ச்சியாளர்கள் ஆயத்தமாக இருப்பதாக ஒரு வாரம் முன்பாகவே உமார், நிசாம் அவர்களுக்குத் தெரிவித்தான். பேரரசர் சுல்தான் அவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிடுவதற்கு வேண்டிய வேலைகளையும், அவர் எதிரில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் நாடகம் போல் நடத்திக் காட்ட நிசாம் ஏற்பாடு செய்தார்.


18. கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்

சுல்தான் மாலிக்ஷா அவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிட வருவதாக இருந்த அன்று, அவர் காலையில் முதலில் மான்வேட்டை முடிந்தபிறகு மாலையில் அங்கே நேரே வருவதாக இருந்தது. மத்தியானத்துக்குப் பிறகு அந்த ஆராய்ச்சிக்கூடம் பார்ப்பதற்கு ஒரு கேளிக்கைக்கூடாரம் போல் காட்சியளித்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த தோட்டம் முழுவதும் தரையில் ரத்னக் கம்பளங்கள் விரிக்கப் பட்டிருந்தன. மரத்தடிகளிலே, பலவிதமான கோப்பைகளிலே விதவிதமான கறிவகைகளும், சர்பத்தும், பிற உணவுப் பொருள்களும் வைத்துக்கொண்டு வேலையாட்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அடையாள முறைக் கணிதப் பேராசிரியரும், உமாரின் கணித ஆசிரியருமான அலி அவர்களும், பல்வேறு கலைக் கழகங்களின் பேராசிரியர்களும் தங்கள் அரசாங்க உடைகளையணிந்துகொண்டு அங்கு வந்து கூடினார்கள். பள்ளி வாசலிலிருந்து வந்த மதத் தலைவர்களான முல்லாக்களும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் எதுவும் பேசாமலும், எவருடன் கலவாமலும் தனியே ஒரு புறத்தில் இருந்தார்கள். முல்லாக்களையெல்லாம் அவரவர்களுக்குரிய மரியாதையுடன் நிசாம் அவர்களே வரவேற்று, சுல்தான் அவர்களின் ஆஸ்தான மேடையின் அருகிலே உள்ள ஆசனங்களில் அமர வைத்தார். நாட்டிலே முழு ஆற்றலும் வாய்ந்த சமயப் பேரவையின் உறுப்பினர்களான அவர்களுடைய கருணை நிறைந்த ஆதரவு இருந்தால்தானே விஞ்ஞானம் பிழைக்க முடியும். அதற்காகவேதான் நிசாம் அவர்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்தினார். அவர்களோடு பேசும்போது, நேர் எதிராக நின்று பேசுவது கூடாதென்றும், அது மரியாதைக் குறைவு